282. கற்பு முல்லை
1பொன்றிகழ் சுணங்கிற் பூங்க ணரிவை
நன்றறி கொழுநனை நலமிகுத் தன்று.

(இ - ள்.) பொன்போல் இலங்கும் சுணங்கினையும் பொலிந்த கண்ணினையுமுடைய மடந்தை நன்மையறியும் கொழுநனுடைய நன்மையைப் பெருகச் சொல்லியது எ-று.

(வ - று.)
2நெய்கொ ணிணந்தூ நிறைய வமைத்திட்ட
குய்கொ ளடிசில் பிறர்நுகர்க-வைகலும்
அங்குழைக் கீரை யடகு மிசையினும்
எங்கணவ னல்க லினிது.

(இ - ள்.) நெய்யைத் தன்னிடத்துக் கொண்ட நிணமும் தசையும் மிகக்கூட்டி ஆக்கின பொரிக்கறியுடைத்தான சோற்றைப் பிறர் அருந்துக,நாடோறும்; அழகிய தளிரையுடைய கீரையாகிய இலைக்கறியை நுகரினும் எமது கொழுநன்அருளுமது, இனிதாயிருக்கும் எமக்கு எ-று.

குய்-நகையென்றுமாம்.

(8)

1. முருகு. 145.
2. மதுரைக். 755-8.