291. நயப்புற்றிரங்கல்
கொய்தழை யல்குல் கூட்டம் வேண்டி
எய்துத லருமையி னிறப்பப் புகழ்ந்தன்று.

(இ - ள்.) கொய்தழையான் அணிந்த அல்குலையுடையாள் தன் புணர்ச்சியை விரும்பிப் பொருந்துதற்கு அருமையான் மிகவும் புகழ்ந்தது எ-று.

(வ - று.)
பெருமட நோக்கிற் சிறுநுதற் செவ்வாய்க்
கருமழைக்கண் வெண்முறுவற் பேதை-திருமுலை
புல்லும் பொறியி லேனுழை
நில்லா தோடுமென் னிறையி னெஞ்சே.

(இ - ள்.) மிக்க மடப்பத்தாற் சிறந்த பார்வையினையும் சிறிய நுதலினையும் சிவந்த வாயினையும் கரியமழைபோலக் குளிர்ந்த கண்ணினையும் விளர்த்த எயிற்றினையுமுடைய மடவாள்தன் அழகிய முலையைத் தழுவும் விதியிலாதேனிடத்துத் தரியாதே ஓடாநின்றது, என்னுடைய நிறையில்லாத மனம் எ-று.

(7)