299. காண்டல் வலித்தல்
மைவரை நாடனை மடந்தை பின்னரும்
கைவளை சோரக் காண்டல் வலித்தன்று

(இ - ள்.) மேகத்தைப் பொருந்தின மலைநாடனை மடவாள் இரண்டாவதும் கையில் வளைசோர்கையாலே காணவேண்டுமென்றலை நிச்சயித்தது எ-று.

(வ - று.)
வேட்டவை யெய்தி விழைவொயிதல் பொய்போலும்
மீட்டு மிடைமணிப் பூனானைக் - காட்டென்று
1மாமை பொன்னிறம் பசப்பத்
தூமலர் நெடுங்கண் டுயிறுறந் தனவே.

(இ - ள்.) விரும்பினவற்றைப் பெற்று ஆசைப்பாடு நீங்குமது பொய்யே போலும்; இரண்டாவதும் செறிந்தமணியாற் சிறந்த ஆபரணத்தினையுடையானைக் காட்டுகவென்று சொல்லி மேனி பொன்னிறம் போலப் பசப்பத் தூமலர்போன்ற நெடிய விழிகள் உறக்கத்தை ஒழிந்தன எ-று.

கண், காட்டென்று துயில் துறந்தனவென்க.

(6)

1. மாமை பசத்தல் : குறுந். 27 : 4-5.