302. கனவின் அரற்றல்
ஒட்டொடி மடந்தை யுருகெழு கங்குலிற்
கண்டவன் கரப்பக் கனவி னரற்றின்று.

(இ - ள்.) ஒள்ளிய வளையினையுடைய தலைவி அஞ்சுதல் பொருந்திய இரவுப்பொழுதிடத்துக் கண்ட தலைவன் ஒளிப்பக் கனவின்கண் வாய்விட்டுப் புலம்பியது எ-று.

(வ - று.)
அயர்வொடு நின்றே னரும்படர்நோய் தீர
நயம்வரும் பள்ளிமே னல்கிக் - கயவா
நனவிடைத் தமியேன் வைகக்
கனவிடைத் தோன்றிக் கரத்தனீ கொடிதே.

(இ - ள்.) மயக்கத்தொடு நின்றேனுடைய அரிய நினைவினால் வந்த நோய் நீங்க நன்மையுண்டாம் சயனத்தின்மேல் எனக்கருளி, கீழ் மகனே, நனவின்கண்ணே தனியேனாகி யான் தங்கக் கனவினிடத்தே தோற்றி நீ மறைந்துபோவது கொடிதாயிருந்தது எ-று.

(9)