306. வேட்கை முந்துறுத்தல்
கையொளிர் வேலவன் கடவக் காமம்
மொய்வளைத் தோளி முந்துற மொழிந்தன்று.

(இ - ள்.) கையிடத்தே விளங்கும் வேலினையுடையவன் செலுத்த வேட்கையைச் செறிந்த தொடியாற் சிறந்த தோளினையுடையாள் தலைவன் முன்னே சொல்லியது எ-று.

(வ - று.)
எழுதெழின் மார்ப மெனக்குரித் தாகென்
றழுதழுது வைகலு மாற்றேன் - தொழுதிரப்பல்
வல்லிய மன்ன வயவேலோய் வாழ்கென
அல்லியந்தார் நல்க லறம்.

(இ - ள்.) சந்தன குங்குமச் சேற்றால் வரிக்கும் அழகினையுடைய அகலம் எனக்கே சேமமாக வேண்டுமென்று சொல்லி அழுதழுது நாடோறும் பொறேனாகிப் பணிந்து வேண்டிக்கொள்வேன்; புலியை யொத்த வலிய வெற்றிவேலினையுடையோய், உயிர் வாழ்வாயாகவென எனக்கு நின் அல்லியினையுடைய மாலையைத் தருதல்காண் அறமாவது எ-று.

(1)