முகைபுரை முறுவன் முள்ளெயிற் றரிவை வகைபுனை வளமனை வரவெதிர்ந் தன்று. (இ - ள்.) முல்லையரும்பன்ன நகையாற் சிறந்த கூரிய பல்லினையுடைய மடவாள் பல கூறுபடக் கைசெய்த செல்வமனையிடத்தே தலைவன் வருதலை ஏற்றிருந்தது எ-று. (வ - று.) காம நெடுங்கட னீந்துங்காற் கைபுனைந்த பூமலி சேக்கைப் புணைவேண்டி - நீமலிந்து செல்லாய் சிலம்பன் வருதற்குச் சிந்தியாய் எல்லாக நெஞ்ச மெதிர். (இ - ள்.) ஆசையாகிய பெரிய கடலை நீந்துமிடத்துக் கைசெய்யப் பட்ட மலர்மிக்க சயனத்திடத்துக் கூட்டமாகிய தெப்பத்தை வேண்டி நீ விரைந்து போகாய்; தலைவன் இவ்விடத்து வருவதற்கு நினையாய்; நீ மயக்கம் நீங்கி விளக்கமுற என் நெஞ்சே, எதிரே எ-று. எதிர் செல்லாயென்க. (4) |