310. வாராமைக்கு அழிதல்
நெடுவேய்த் தோளி நிமித்தம் வேறுபட
வடிவே லண்ணல் வாராமைக் கழிந்தன்று.

(இ - ள்.) உயர்ந்த மூங்கிலன்ன தோளினாள், சொகினவிகற்பத்தாலே வடித்த வேலினையுடைய தலைவன் வாராதொழிய அதற்கு அழிந்தது எ-று.

(வ - று.)
நுடங்கருவி யார்த்திழியு நோக்கருஞ் சாரல்
1இடங்கழி மான்மாலை யெல்லைத் - தடம்பெருங்கண்
தாரார மார்பன் றமியே னுயிர்தளர
வாரான்கொ லாடும் வலம்.

(இ - ள்.) அசையும் மலையருவி ஆரவாரித்து விழும் பார்ப்பதற்கரிய மலைப்பக்கத்து இராகவேகத்தையுண்டாக்கும் மயக்கமுடைய மாலையளவிலே மிகப்பெரிய கண்ணானது, மாலையாற் சிறந்த ஆரமார்பன் தனியேனுடைய உயிர் மெலிய வாரான் போலும், வலம் துடியாநின்றது எ-று.

தடம்பெருங்கண் வலமாடுமென்க.

(5)

1. சிலப். 10: 219-20, அடியார்.; மணி. 10:22, 18:119