314. பொழுதுகண்டு இரங்கல்
நிற்ற லாற்றா ணெடிதுயிர்த் தலமரும்
பொற்றொடி யரிவை பொழுதுகண் டிரங்கின்று

(இ - ள்.) உயிர்நிற்றலைப் பொறாளாய் நெட்டுயிர்ப்புக் கொண்டு சுழலும் பொன்னாற்செய்த வளையினையுடைய தலைவி மாலைப்பொழுதைக் கண்டு வருந்தியது எ-று.

(வ - று.)
இறையே யிறந்தன வெல்வளை யுண்கண்
உறையே பொழிதலு மோவா-நிறையைப்
பருகாப் பகல்கரந்த பையுள்கூர் மாலை
உருகா வுயங்கு முயிர்.

(இ - ள்.) கையிறையைக் கடந்தன, விளக்கத்தினையுடைய தொடிகள்; மையுண்ட விழிகள் துளியைச் சொரிதலும் ஒழியா; என் நிறையை உண்டு ஆதித்தன் ஒளித்த நோய்மிகும் மாலைக்காலத்துக் கரைந்து வருந்தா நிற்கும், பிராணன் எ-று.

(9)