319. கூட்டத்துக் குழைதல்
பெய்தா ரகலம் பிரித லாற்றாக்
1கொய்தழை யல்குல் கூட்டத்துக் குழைந்தன்று

(இ - ள்.) இட்ட மாலையினையுடைய அகலத்தை நீங்குதல் பொறாத பறித்த தழையாற் சிறந்த அல்குலினையுடையாள் புணர்ச்சியிடத்து நெகிழ்ந்தது எ-று.

(வ - று.)
மயங்கி மகிழ்பெருக மால்வரை மார்பிற்
றயங்கு புனலூரன் றண்டார் -முயங்கியும்
பேதை புலம்பப் பிரிதியோ நீயென்னும்
கோதைசூழ் கொம்பிற் குழைந்து.

(இ - ள்.) மனங்கலங்கிக் களிப்பு மிகப் பெரிய வரைபோன்ற மார்பினையுடைய அசையும் புனலூரன்றன் குளிர்ந்த மாலையைத் தழுவியும் மடவாள் யான் தனிமைப்பட நீ பிரிகின்றாயோவென்று சொல்லும் , மாலை சுற்றின பூங்கொம்புபோலத் தளர்ந்து எ-று.

தளர்ந்து நீ பிரிதியோவென்னும்.

(14)

1. பு.வெ. 291.