328. துயரவற் குரைத்தல்
மான்ற மாலை மயிலியல் வருத்தல்
தோன்றக் கூறித் துயரவற் குரைத்தன்று.

(இ - ள்.) மயங்கிய மாலைக்காலம் மயில்போன்ற இயலினையுடைய தலைவியை வருத்தலை அறியச் சொல்லி அவள் துன்பத்தைத் தோழி தலைவிற்குச் சொல்லியது எ-று.

(வ - று.)
உள்ளத் தவலம் பெருக வொளிவேலோய்
எள்ளத் துணிந்த விருண்மாலை -வெள்ளத்துள்
தண்டா ரகலந் தழூஉப்புணையா நீநல்கின்
உண்டாமென் றோழிக் குயிர்.

(இ - ள்.) நெஞ்சில் துயரமிகச் சோதிவேலாய் இகழ்தற்கு நிச்சயித்த இருளினையுடைய மாலைவெள்ளத்திலே குளிர்ந்த மாலை மார்பத்தைத் தழுவுவதற்குத் தெப்பமாக நீ அளிப்பாயாகில் எனது தோழிக்கு உயிர் உண்டாம் எ-று.

(4)