341. குற்றிசை
பொற்றா ரகலம் புல்லிய மகளிர்க்
கற்றாங் கொழுகா தறங்கண்மா றின்று.

(இ - ள்.) அழகிய மாலை மார்பைப் பொருந்திய அரிவையர்க்கு அற்றறுதிப்பட்டு நடவாது அறத்தைக் கண்மறுத்தது எ-று.

(வ - று.)
1கரிய பெருந்தடங்கண் வெள்வளைக்கை யாளை
மரிய கழிகேண்மை மைந்த - தெரியின்
விளிந்தாங் கொழியினும் வட்டகலார் தம்மைத்
தெளிந்தாரிற் றீர்வது தீது .

(இ - ள்.) கரியவாய் மிகவும் பெரிய விழியினையும் விளர்த்த தொடியணிந்த கரத்தினையுமுடையாளைப் பொருந்திய மிக்க தொடர்ச்சியினையுடைய தலைவனே , ஆராயின் , இறந்துபடினும் விட்டு நீங்காராய்த் தம்மைத் துணையென்று தேறினாரிடத்து நின்றும் கழிவது பொல்லாது எ-று.

(17)

1. தொல். அகத். சூ. 54, இளம் . மேற்.