நாறிருங் கூந்தன் மகளிரை நயப்ப வேறுபடு வேட்கை வீயக் கூறின்று. (இ - ள்.) நறுநாற்றங் கமழும் பெரிய குழலினையுடைய மடவாரை விரும்ப விகற்பித்த காதலைக் கெடச்சொல்லியது எ-று. (வ - று.) பண்ணவாந் தீஞ்சொற் பவளத் துவர்ச்செவ்வாய் பெண்ணவாம் பேரல்குற் பெய்வளை - கண்ணவாம் நன்னலம் பீர்பூப்ப நல்கார் விடுவதோ தொன்னல முண்டார் தொடர்பு . (இ - ள்.) பண் ஆசைப்பட்ட தித்தித்த சொல்லினையும் பவளம்போல மிகச் சிவந்த வாயினையும் பெண்மைத்தன்மை அவாவும் பெரிய அல்குலினையும் இட்ட வளையினையுமுடையவள் தன் கண்களாசைப்படும் நல்ல அழகு பீர்க்கம்பூப்போலப் பசப்ப அருளாராய்க் கைவிடுவதோ , பழையதாகிய நலத்தை அனுபவித்தவர் உறவு எ-று. (18) |