35. குடி நிலை
1மண்டிணி ஞாலத்துத் தொன்மையு மறனும்
கொண்டுபிற ரறியுங் குடிவர வுரைத்தன்று .

(இ - ள்.) மண்செறிந்த பூமியிடத்துப் பழமையும் , தறுகண்மையுமுட் கொண்டு பிறரறியும் குடியின் வரலாற்றினைச் சொல்லியது எ-று.

மண்டிணிஞாலம் : மண்ணுலகு விண்ணுலகென்றாற்போலக் கொள்க.

(வ - று.)
பொய்யகல நாளும் புகழ்விளைத்த லென்வியப்பாம்
2வையகம் போர்த்த வயங்கொலிநீர் - கையகலக்
3கற்றோன்றி மண்டோன்றாக் காலத்தே வாளோடு
முற்றோன்றி மூத்த குடி .

(இ - ள்.) பொய்ம்மை நீங்க நாடோறும் கீர்த்தியுண்டாக்குதல், என்ன அதிசயமாம், பூமியைமறைத்த தெளிந்துகறங்கும் உகாந்த வெள்ளம் விட்டு நீங்க, முற்பட மலைதோன்றிப் பூமிதோன்றாத அளவிலே வாளுடனே எல்லாரிலும் முற்பட மலையிடத்திலே தோன்றிப் பழையதாகிய குடி! எ-று.

குடி புகழ்விளைத்தல் என்னவியப்பாம். 4எவனென்பது என்னெனக் குறைந்து நின்றது. மூத்தகுடியென்றது பூசலிலே வாளாலே பட்ட குடியென்பாருமுளர்.

(14)

1. புறநா. 2 : 1; சிலப். 26 : 42; மணி. 11 : 95. 2. பரி, 6 : 3. 3. மதுரைக், 4. 'என்னவென்பது'.