38. குடைநிலை
1பெய்தாமஞ் சுரும்பிமிரப் பெரும்புலவர் புகழ்பாடக்
கொய்தார் மன்னவன் குடைநாட் கொண்டன்று.

(இ - ள்.) தன்மேலிட்ட மாலையிலே வண்டுகளொலிப்ப மிக்க அறிவினையுடையோர் கீர்த்தியைச் சொல்லக் கத்தரிகையால் மட்டஞ்செய்த மாலையினையுடைய வேந்தன் குடையைப் புறவீடு விட்டது எ-று.

(வ - று.)
முன்னர் முரசிரங்க மூரிக் கடற்றானைத்
துன்னருந் துப்பிற் றொழுதெழா- மன்னர்
உடைநா ளுலந்தனவா லோதநீர் வேலிக்
குடைநா ளிறைவன் கொள.

(இ - ள்.) தன்முன்னே வீரமுரசு முழங்க , பெரிய கடல்போன்ற சேனையினையும் கிட்டுதற்கரிய வலியினைமுடையராய்ப் பணிந்தெழாத வேந்தர் தம்முடைய வாணாள் கெட்டன; 2திரைமிகுந்த கடலை வேலியாகவுடைய பூமியிடத்து,குடையை அரசன் புறவீடுவிட எ - று.

புறவீடு விட உடைநாளுலந்தனவென்க. ஆல்- அசை.

(3)

1. சிலப்.5 : 89-93 ,அடியார். மேற் . 2. குளிர்ந்த கடலை