41. இதுவுமது
மைந்துடை யாடவர் செய்தொழில் கூறலும்
அந்தமில் புலவ ரதுவென மொழிப.

(இ - ள்.) வலியினையுடைய வீரர் செய்யுந் தொழிலைச் சொல்லுதலும் முடிவில்லாத அறிவினையுடையோர் அத்துறையென்று சொல்லுவர் எ-று.

(வ - று.)
தமருட் டலையாத றார்தாங்கி நிற்றல்
எமருள்யா மின்னமென் றெண்ணல்-அமரின்
முடுகழலின் முந்துறுதன் .1முல்லைத்தார் வேந்தன்
தொடுகழன் மைந்தர் தொழில்.

(இ - ள்.) தம்முடைய சுற்றத்தாரின் மேலாகுதல், தூசிப்படையைத் தடுத்து நிற்றல், எங்கள் படைவீரருள் யாம் இன்னதன்னமையேமென்றெண்ணுதல்,போரிடத்து விரைந்து செல்லும் நெருப்புப்போல முற்படப் புகுதல், முல்லைத்தாரினையுடைய மன்னனுடைய கட்டும் வீரக்கழலினையுடைய வீரர் செய்தி எ - று.

முல்லைத்தார் கூறியது, 2"வஞ்சி தானே முல்லையது புறனே" என்றதனால்.

(6)

1. சீவக.547.
2. தொல்.புறத்.சூ.6.