62. காஞ்சியதிர்வு
மேல்வரும் படைவரன் மிகவு மாற்றா
வேல்வ லாடவன் விறன்மிகுத் தன்று .

(இ - ள்.) எதிரூன்றுஞ் சேனை மேலிடுதலைப் பொறாத வேற்றொழிலை வல்ல வீரனுடைய வெற்றியை மிகுத்துச் சொல்லியது எ-று.

(வ - று.)
மன்மேல் வருமென நோக்கான் மலர்மார்பில்
வென்வேன் முகந்த 1புண் வெய்துயிர்ப்பத் - தன்வேல்
பிடிக்கலு மாற்றாப் பெருந்தகை யேவத்
துடிக்கண் புலையான் றொடும் .

(இ - ள்.) மாற்றரசன் தன்மேலே மீதூர்ந்துவருமென்று பாரானாகி அகன்ற மார்பிடத்து வென்றி 2வேல் பாய்ந்து முதுகுபுறத்துருவிய புண் வெய்தாக உயிர்ப்பத் தன்னுடைய வேலைக் கையாற்பிடிக்கவுமாட்டாத பெரிய மேம்பாட்டினையுடையவன் சொல்லத் துடியின் கண்ணைப் புலையன் கொட்டாநிற்கும் எ-று.

(2)

1. சீவக. 2355 .
2. வேல்வேண்டினபடி கொண்டபுண்.