கொடுத்தபின்னர்க் கழன்மறவர் எடுத்துரைப்பினு மத்துறையாகும் . (இ - ள்.) அரசன் படைவழங்கின பின்னர்க் கழல்வீரர் உயர்த்துச் சொல்லினும் முன்புசொன்ன துறையேயாம் எ-று. (வ - று.) துன்னருந் துப்பிற் றொடுகழலார் சூழ்ந்திருப்பத் தன்னம ரொள்வாளென் 1கைதந்தான் - மன்னற்கு மண்ணகமோ வைகின்று மாலை நெடுங்குடைக்கீழ் விண்ணகமும் வேண்டுங்கொல் வேந்து . (இ - ள்.) கிட்டுதற்கரிய வலியினையும் கட்டிய வீரக்கழலினையுமுடையார் தன்னைச் சுற்றியிருப்பத் தனக்கு மேவும் ஒள்ளியவாளை என் 2கையிலே தந்தான்; அரசற்குப் பூமியிடமோ தங்காநின்றது , முத்தமாலை யணிந்த கொற்றக்குடைக்கீழ்; சுவர்க்கலோகத்தையும் விரும்புங்கொல் அரசன் எ-று. 3ஒருபொரு ளிருசொற் பிரிவில வரையார்" என்பதனானாம் . 4"ஏந்திய கொள்கையார் சீறி னிடைமுரிந்து, வேந்தனும் வேந்து கெடும்" என்பதனால், வேந்து இராச்சியமென்றுமாம் . இனி, வேற்று மன்னர்க்கு மண்ணகமோ வைகுதலில்லை; அவரை விண்ணகத்தின்கண் ஏற்றலையும் அரசன் வேண்டுங்கொலென்றுமாம் . இப்பொருட்கு மன்னர்க்கென்பது பாடம் . (5)
1. கைத்தந்தமன்னர்க்கு 2. கையிலேதந்த அரசற்கு 3. தொல். எச்ச. சூ. 64. 4. குறள். 899. |