முதுகுடி மறவர் முன்னுறச் சூழக் கொதியழல் வேலோன் குடைசென் றன்று . (இ - ள்.) பழங்குடிக் கொடுவினையாளர் முன்னே சூழ்ந்துபோக அழலும் நெருப்புப்போன்ற வேலினையுடையவன் குடையைப் புறவீடு விடுத்தது எ-று. (வ - று.) 2தெம்முனை தேயத் திறல்விளங்கு தேர்த்தானை வெம்முனை வெற்றி 3விறல்வெய்யோன் - தம்முனை நாட்டிப் பொறிசெறித்து நண்ணார்மேற் செல்கென்று கூட்டிநாட் கொண்டான் குடை . (இ - ள்.) பகைப்புலங்கெட , வெற்றிமிகுந்த தேராற்சிறந்த சேனையினையும் வெய்ய பூசல்வெற்றியினையுமுடைய கொற்றத்தை விரும்பியோன் இருபெருவேந்தர்தாம் பொரும்பூசலை இன்னநாளென்று நிச்சயித்துக் கட்டித் தன் இலாஞ்சனையிட்டுப் பகைவர்மேற் போகவெனச் சொல்லிச் சோதிடவருடனேகூட்டி நல்லநாளிலே குடையைப் புறவீடு விட்டான் எ-று. (8)
1. சிலப். 5 : 91. 2. நன். சூ. 235, மயிலை. மேற். 3. மணி. 26 : 91. |