69. 1வஞ்சினக் காஞ்சி
வெஞ்சின வேந்தன் வேற்றவர்ப் பணிப்ப
வஞ்சினங் கூறிய வகைமொழிந் தன்று .

(இ - ள்.) வெய்ய கோபத்தையுடைய மன்னவன் பகைவரைத் தாழப் பண்ணுவான் வேண்டி இவ்வாறு செய்வேனெனச் சொல்லிய கூறுபாட்டைச் சொல்லியது எ-று.

(வ - று.)
இன்று பகலோ னிறவாமு னொன்னாரை
வென்று களங்கொள்ளா வேலுயர்ப்பின் - என்றும்
அரணவியப் பாயு மடையார்மு னிற்பேன்
முரணவிய முன்முன் மொழிந்து .

(இ - ள்.) இற்றைநாள் ஆதித்தன் படுவதன்முன் பகைவரை வெற்றியைச்செய்து போர்க்களத்தைக்கொள்ளாத வேலை எடுப்பேனாயின் எந்நாளும் யானிருந்த அரண்கெடத் தாக்கும் பகைவர்முன்னே நிற்பேனாவேன் மாறுபாடுகெட முன்னே முன்னே தாழவார்த்தைகளைச் சொல்லி எ-று.

(9)

1. தொல். புறத். சூ. 24.