7. புறத்திறை
நோக்கருங் குறும்பி னூழையும் வாயிலும்
போக்கற வளைஇப் புறத்திறுத் தன்று .

(இ - ள்.) பகைவரது கண்ணாற் பார்த்தற்கரிய குறும்பின் நூழையும் பெருவாயிலும் யாவரும் புறப்படாதபடி வளைந்து ஊர்மருங்கே விட்டது எ-று.

(வ - று.)
1உய்ந்தொழிவா ரீங்கில்லை யூழிக்கட் டீயேபோல்
முந்தமரு ளேற்றார் முரண்முருங்கத் - தந்தமரின்
2ஒற்றினா னொற்றி யுரவோர் குறும்பினைச்
சுற்றினார் போகாமற் சூழ்ந்து .

(இ - ள்.) பிழைத்திருப்பார் இவ்விடத்து யாவருமில்லை; யுகாந்த காலத்து நெருப்பையொப்ப முற்படப் பூசலில் எதிர்ந்தார் மாறுபாடு கெடத் தம்முடைய உற்றாராய ஒற்றராலே ஆராய்ந்து மிகுந்தவலியினை யுடையோர் அரணினை வளைந்துகொண்டார் , ஒருவரும் தப்பிப்போகாத படி விசாரித்து எ-று.

சூழ்ந்து சுற்றினாரென்க.

(7)

1. தொல். புறத். சூ. 3, இளம். மேற்.
2. ஒற்றினா னாய்ந் தாய்ந் துறுவலியோரரணம்