தலைகொடுவந்தா னுண்மலியச் சிலையுடைவேந்தன் சிறப்பீந்தன்று . (இ - ள்.) தலையைக் கொடுவந்தான் மனமுவப்ப வில்லினையுடைய மன்னன் செல்வத்தைக் கொடுத்தது எ-று. (வ - று.) உவன்றலை யென்னு முறழ்வின்றி யொன்னார் இவன்றலையென் றேத்த வியலும் - அவன்றலை தந்தாற்கு நல்கல் வியப்போ 1கிளந்தேத்தி வந்தார்க் குவந்தீயும் வாழ்வு . (இ - ள்.) உவன் இவனுக்கு நேரென்று சொல்லும் ஒப்பின்றிப் பகைவர் எல்லாரிலும் இவன் தலையானவனென்று சொல்லி வாழ்த்த நடக்கும் அவனுடைய தலையைக் கொடுவந்தவற்குச் செல்வங் கொடுத்தல் அதிசயமோ, மிகப் புகழ்ந்துவந்தார்க்கு மகிழ்ந்துகொடுக்குஞ் செல்வம் ! எ-று. (12)
1. கிளர்ந்தேத்தி. |