81. கட்காஞ்சி
நறமலியு நறுந்தாரோன்
மறமைந்தர்க்கு மட்டீந்தன்று.

(இ - ள்.) மதுமிகும் கமழுமாலையோன் தறுகணாளர்க்கு மதுவைக் கொடுத்தது எ-று.

(வ - று.)
ஒன்னா முனையோர்க் கொழிக வினித்துயில்
மன்னன் மறவர் மகிழ்தூங்கா - முன்னே
படலைக் குரம்பைப் பழங்கண் முதியாள்
விடலைக்கு வெங்கள் விடும்.

(இ - ள்.) பொறாத பகைவர்க்கு இனி ஒழிவதாக உறக்கம்; வேந்தன், கொடுவினையாளர் மதுவையுண்டு களித்தாடுவதற்கு முன்னே தழைக்கற்றையான் வேய்ந்த குடிலிடத்துப் புன்கட்கிழவி பெற்ற வீரனுக்கு வெவ்விதமான மதுவை விடாநின்றான் எ-று.

(21)