காதற் கணவனொடு கனையெரி மூழ்கும் மாதர்மெல் லியலின் மலிபுரைத் தன்று. (இ - ள்.) அன்பினையுடைய தன்கொழுநனோடு செறிந்த நெருப்பிலே அழுந்தும் காதலையுடைய மெத்தென்ற தன்மையாற் சிறந்தவள் தன் மிகுதியைச் சொல்லியது எ-று. (வ - று.) தாங்கிய கேளொடு தானு 1மெரிபுகப் பூங்குழை யாயம் புலர்கென்னும் - நீங்கா விலாழிப் பரித்தானை வெந்திறலார் சீறூர்ப் புலாழித் தலைக்கொண்ட புண். (இ - ள்.) தரித்தகணவனோடு தானும் நெருப்பிலேபுகுவான் வேண்டிப் பொலிந்த மகரக்குழையையுடையவள் தோழிமாரை அகலப்போமினென்று சொல்லும்; ஒழியாத வாய்நுரையினையுடைய குதிரையாற் சிறந்த சேனைப் பகைவர் சீறூரிடத்துப் புலானாற்றத்தினையுடைய சக்கரத்தாலே எறியப்பட்டபுண்ணை எ-று. புண்ணைத்தாங்கிய கேளொடு எனக்கூட்டுக. புலவென்பதனுள் அகரம் தொக்கது; ஒற்று இரட்டாமையுமறிக. (22)
1. மெரிபுகீஇப் |