ஆழ்ந்துபடு கிடங்கோ டருமிளை காத்து வீழ்ந்த வேலோர் விறன்மிகுத் தன்று . (இ - ள்.) ஆழமுடைத்தான கிடங்கினோடு அரிய காவற்காட்டைக் காத்துப் பட்ட வேல்வீரர் வெற்றியைச் சொல்லியது எ-று. (வ - று.) ஈண்டரில் சூழ்ந்த விளையு மெரிமலர்க் காண்டகு நீள் கிடங்குங் காப்பாராய் - வேண்டார் மடங்க லனைய மறவேலோர் தத்தம் தத்தம் உடம்பொடு காவ லுயிர். (இ - ள்.) திரண்ட பிணக்குச் சுற்றின காவற்காடும் நெருப்புப் போன்ற பூவினையுடைய காணத்தக்க நீண்ட அகழும் காவல் புரிவாராய் வேண்டுகிலர்;சிங்கமொத்த சினவேலார் தத்தமுடைய மெய்யுடன் உயிரைக் காத்தலை எ-று. காத்தலை வேண்டாரென்க. (4) |