99. 1கொற்ற வுழிஞை
அடையாதா ரரண் 2கொள்ளிய
படையோடு பரந்தெழுந்தன்று.

(இ - ள்.) பகைவர்தங் காவற்பதியைக் கைக்கொள்வான் வேண்டிச் சேனையோடு கைவளர்ந்து சென்றது எ-று.

(வ - று.)
வெள்வாட் கருங்கழற்கால் வெஞ்சுடர்வேற் றண்ணளியான்
3கொள்வான் கொடித்தானை கொண்டெழுந்தான் - நள்ளாதார்
அஞ்சுவரு வாயி லருமிளைக் குண்டகழி
மஞ்சிவரு ஞாயின் மதில் .

(இ - ள்.) ஒளிபரந்த வாளினையும் வலிய வீரக்கழலாற்சிறந்த காலினையும் வெய்ய சோதியாற்பொலிந்த வேலினையும் தண்ணளியையுமுடையவன் கைப்பற்றிக் கொள்வானாகப் பதாகையினையுடைய சேனையை ஒன்றுபடக் கொண்டெழுந்தான்; பொருந்தாதார் வெருவரு வாயிலினையும் புகுதற்கரிய குறுங்காட்டினையும் ஆழ்ந்த கிடங்கினையும் மேகம் பரக்கும் ஏவறையினையுமுடைய அரணத்தை எ - று.

(5)

1. " கொள்ளார்தேங் குறித்த கொற்றம் " என்பர்; தொல் . புறத் . சூ . 12 .
2. கொளீஇய.
3. நன் . சூ . 343 , மயிலை . மேற் .