ஏழாவது
இடைச்சொல் மரபு
51. சாரியையாய் ஒன்றல் உருபாதல் தங்குறிப்பில்
நேரும் பொருளாதல் நின்றசையாய்ப் - போதல்
வினைச்சொற்கீ றாதல் இசைநிறைத்து மேவல்
இனைத்தே இடைச்சொல் அளவு.
என்பது சூத்திரம். இவ்வோத்து என்ன பெயர்த்தோ? எனின்,
இடைச்சொன் மரபு என்னும் பெயர்த்து. இவ்வோத்தினுள், இத்
தலைச்சூத்திரம் என்னுதலிற்றோ? எனின், இடைச்சொற்களுக்கெல்லாம்
பொதுவிலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று.
இ - ள்:
இடைச்சொல்லாவன: சொற் புணருமிடத்துச் சாரியையாய்
நின்றும், உருபாய் நின்றும், தத்தங் குறிப்பிற் பொருள் செய்ய நின்றும்,
அசைச்சொல்லாய் நின்றும், வினைச்சொற்கு ஈறாய் நின்றும், இசைநிறையாய்
நின்றும் நடைபெறுவதல்லது தனித்து நடைபெறுவனவல்ல எ-று.
சாரியை யாவன: அல், அத்து, அன், அம், அக்கு, இக்கு,
கெழு, நம்,
தம், ஆன், உம், வற்று, ஞான்று, இன். இற்று. என். எம். நும். தம் என்பன
முதலியன.
உருபாவன: ஐ, ஒடு, கு, இன், அது, கண் என்பன முதலாயன.
தத்தங் குறிப்பிற் பொருள் செய்வன மேலே சொல்லுதும்.
அசைச்சொல்லாவன :யா, கா, பிற, பிறக்கு, அரோ, போ, மாது,
மியா,
இக, மோ, மதி, இகும் சின் என்பன முதலாயின.
இனி, வினைச்சொற்கு ஈறாவன: அன், ஆன், அள், ஆள், அர்,
ஆர்,
ப என்பன முதலாயின.
இசைநிறையாவன: பாடுகோ பாடுகோ என்பன முதலாயின எனக்
கொள்க.
பிறர், இடைச்சொல் வரும்வழி ஏழென்று சொல்ல, இந்நூலுடையார்
ஒப்பில் போலியை நீக்கியது என்னையோ எனின்,
'ஒப்பில் போலியு மப்பொருட் டாகும்'
(தொல். இடை. 30)
என்றதனால், அஃது அசைநிலையுள்ளே யடங்கும் ஆதலான் இங்குக்
கொண்டதில்லை.
|