சொல் அதிகாரம்117

      எ - ன்: ஒருசொற் பல பொருண்மேல் வரும் உரிச்சொல் ஆமாறு
உணர்த்துதல் நுதலிற்று.

     
இ - ள்: விரைவும், விளக்கமும், மிகுதியும், சிறப்பும், வரைவும்,
புதுமையும், கூர்மையும், கரிப்பும், ஐயமும், காப்பும், அச்சமும் தோற்றமும்
என்னும் இப்பன்னிரண்டன் மேலும் கடிசொல் நடக்கும் எ-று.

      அவை வருமாறு: ‘கடியார் கலுழி நீந்தி' என்பது விரைவு. ‘கண்ணாடி
யன்ன கடிமார்பன்' என்பது விளக்கத்தின்கண் வந்தது. ‘காலெற்றலிற் கடிசிறந்
துறுத்தும்' என்பதும், கடுந்தொழில் என்பதும் மிகுதி. கடிமலர் என்பது
சிறப்பு. மனை கடிந்தான் என்பது வரைவு, ‘கடிமலர்ப் பிண்டி' என்பது
புதுமை. ‘வாள்வாய் கடிது' என்பது கூர்மை. ‘கடிமிளகு தின்ற கல்லா மந்தி'
என்பது கரித்தற்கண் வந்தது.

     
‘போற்றின் அரியவை போற்றல் கடுத்தபின்
      றேற்றுதல் யார்க்கும் அரிது'   
         (திருக்குறள், 693)


என்பது ஐயத்தின்கண் வந்தது. கடிநகர் என்பது காப்பு. கடும் பாம்பு என்பது
அச்சம். ‘கடுஞ் சூள் தருகுவன்' என்பது தெளிவு.

                        
இதுவும் அது     

59.   வெம்மை விருப்பாம் வியலகல மாகுமரி
     ஐம்மைஎய் யாமை அறியாமை - கொம்மை
     இளமை நளிசெரிவாம் ஏஏற்ற மல்லல்
     வளமை வயம்வலியாம் வந்து.


   
 எ - ன்: இதுவும் உரிச்சொற்கள் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று.

   
 இ - ள்: வெம்மை என்பது விருப்பம். வியல் என்பது அகலம். அரி
என்பது அழகு. எய்யாமை என்பது அறியாமை. கொம்மை என்பது இளமை.
நளி என்பது செறிவு. ஏ என்பது ஏற்றம். மல்லல் என்பது வளம். வயம்

என்பது வலியாம் எ-று.