அவை வருமாறு: ‘அடிநிலம் பரந்து முத்தணிந்த வெம்முலை' இது
விருப்பு. ‘வியன்ஞாலம்' என்பது அகலம். ‘அரிமயிர் முன்கை' என்பது அழகு.
‘எய்யா விளஞ்சூல்' என்பது அறியாமை. ‘கொம்மை வருமுலை' என்பது
இளமை. ‘நளியிரு முந்நீர்' என்பது செறிவு. ‘ஏகலடுக்கத்து' என்பது ஏற்றம்.
ஏக்கழுத்து என்றால் எண்ணாப்பையும் காட்டும்; ஏற்றம் உடைத் தாதல்.
‘மல்லன் மாஞாலம்' இது வளம். வயப்புலி என்பது வலியாம் எனக் கொள்க.
‘வந்து' என்று மிகுத்துச் சொல்லிவதனால், நொசிவு, நுழைவு,
நுணங்கும் நுண்மையாம்.
‘நொசிவு நுணங்கு நுழைவு நுண்மை'
(தொல். உரி. 78)
என்றாராகலின். அவை வருமாறு: ‘நொசிபடு மருங்குல் என்றும்,
‘நுழைமருங்குல்' என்றும், ‘நுணங்கிய கேள்வியர்' என்றும் இவை நுண்மைப்
பொருளாய் வந்தன. பிறவும் அன்ன.
(4)
இதுவும் அது
60. புரைஉயர் பாகும் புனிறீன் றணிமை
விரைவாங் கதழ்வும் துனைவும் - குரையொலியாஞ்
சொல்லுங் கமமுந் துவன்றும் நிறைவாகும்
எல்லும் விளக்கம் எனல்.
எ - ன்:
இதுவும் உரிச்சொல் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று.
இ - ள்:
புரை உயர்வு; புனிறு ஈன்றணிமை; துனைவும் கதழ்வும் விரைவு; குரை ஒலி; கமமும் துவன்றும் நிறைவு;
எல் விளக்கம் எ-று.
அவை வருமாறு: ‘புரைய மன்ற புரையோர் கேண்மை' இஃது
உயர்ச்சி. ‘புனி்ற்றுநாய் குரைக்கும் புல்லெ னட்டில்' என்பதும், ‘புனிற்றா
பாய்ந்த' என்பதும் ஈன்றணிமை. ‘துனைபுன லெக்கரிற் றொக்குடன் குழீஇ'
என்பதும், ‘கதழ்பரி நெடுந்தேர்' என்பதும் விரைவு. ‘குரைகடல்' என்பது
ஒலி. ‘கமஞ்சூன் மாமழை' என்பதும், ‘ஆரியர் துவன்றிய பேரிசை மூதூர்'
என்பதும் நிறைவு. ‘எல்வளை' என்பது விளக்கம்.
|