‘சொல்லும்' என்று மிகுத்துச் சொல்லியவதனால்,
தடவும் கயவும்
நளியும் பெருமையைக் காட்டும்; என்னை?
‘தடவுங் கயவு நளியும் பெருமை'
(தொல். உரி. 24)
என்றாராகலின்.
அவை வருமாறு: தடந்தோள் என்பதும், கயவா யெருமை என்பதும்,
நளிமலை நாடான் என்பதும் இம் மூன்றும் பெருமை.
‘அவற்றுள்
தடவென் கிளவி கோட்டமுஞ் செய்யும்'
(தொல். உரி. 25)
என்றாராகலின்,
அது ‘தடந்தா ணாரை' ‘தடமருப் பெருமை' ‘தடங்கோட் டியாழ்'
எனக் கோட்ட முணர்த்துமாறு கண்டுகொள்க.
‘கயவென் கிளவி *மென்மையுஞ் செய்யும்'
(தொல். உரி. 26)
என்றாராகலின்,
அது ‘கயந்தலைக் குழவி' என மென்மை உணர்த்துமாறு
கண்டுகொள்க. பிறவும் அன்ன.
(5)
உரிச்சொன்மரபு முற்றும்.
--------
ஒன்பதாவது எச்ச மரபு
தொகைச்சொற்களின் இலக்கணம்
91. வேற்றுமை உம்மை வினைபண் புவமையும்
தோற்றிய அன்மொழியும் தொக்கவிடத் - தேற்ற
இருசொல்லும் ஒன்றாம் இலக்கணத்தாற் பல்சொல்
ஒரு சொல்லாய்ச் சேறலு முண்டு்.
என்பது சூத்திரம். இவ்வோத்து என்ன பெயர்த்தோ? எனின்,
எச்சமரபு என்னும் பெயர்த்து; இவ்வோத்தினுள், இத் தலைச் சூத்திரம்
என்னுதலிற்றோ? எனின், தொகைச்சொற்கு எய்தியதோர் இலக்கணம்
உணர்த்துதல் நுதலிற்று.
இ - ள்:
வேற்றுமையும், உம்மையும், வினையும், பண்பும், உவமையும், அன்மொழியும், தொக்க விடத்து
ஒரு சொற்போல நடக்கும்; பல சொல்லுடன் தொக்க விடத்தும் ஒரு சொற்போல் நடக்கும்
எ-று.
-------------------------
* ‘மென்மையுமாகும்' என்பதும் பாடம்.
|