12நேமி நாதம்

பிறப்பு



6.   உந்தியிற் றோன்றும் உதான வளிப்பிறந்து
    கந்தமலி நெஞ்சுதலை கண்டத்து -- வந்தபின்
    ஆசில் அண்ணம் இதழெயிறு மூக்கெனப் 1
    பேசும் எழுத்தின் பிறப்பு.


  
 எ - ன்: எழுத்துக்கட்குப் பிறப்பு ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று.

   
இ - ள்: கொப்பூழ் முதலாகத் தோன்றும் உதானவாயுவினிடத்தே தோன்றி, நெஞ்சும் தலையும், மிடறும் என்னும் முதல் இடவகையினும்; நாவும், அண்ணமும், இதழும் எயிறும், மூக்கும் என்னும் துணைஇட வகையினும் புலப்படும் எழுத்து எ - று.


    என்னை?


   
    உந்தி முதலா முந்துவளி தோன்றித்
    தலையின மிடற்றினு நெஞ்சினு நிலைஇப்
    பல்லு மிதழு நாவு மூக்கு
    மண்ணமு முளப்பட வெண்முறை நிலையா
    னுறுப்புற் றமைய நெறிப்பட நாடி
    யெல்லா வெழுத்துஞ் சொல்லுங் காலைப்
    பிறப்பி னாக்கம் வேறுவே றியல
    திறப்படத் தெரியுங் காட்சி யான. 
           தொல். பிறப். 1.

       
அவ்வழிப்
    பன்னீ ருயிருந் தந்நிலை திரியா
    மிடற்றுப் பிறந்த வளியி னிசைக்கும்   
                   2.

       
அவற்றுள்,
    அ ஆ வாயிரண் டங்காந் தியலும். 
                      3.

   
     இஈ எஏ ஐயென விசைக்கு
     மப்பா லைந்து மவற்றோ ரன்ன
     வவைதா,
     மண்பன் முதனா விளிம்புற லுடைய.    
                4.
-----------------------------------
இவர் மூக்கைத் துணைஇடம் எனக் கூறியது ‘உந்திமுதலா' என்னும் தொல்காப்பியச் சூத்திரத்தை நோக்கியாம் என்க. நன்னூலார் இதனை முதலிடமாகக் கூறினார். அன்றியும் நன்னூலார், இதழ், நா, பல், அண்ணம் என்பவற்றை முயற்சிக்கு உரியன என்றார்.