செய்யுள் விகாரங்கள்
67, மெலித்தல் குறுக்கல் விரித்தல் தொகுத்தல்
வலித்தலே நீட்டல் வரினும் - ஒலிக்கும்
வரிவளாய் தொல்குறைச்சொல் வந்திடினும் உண்மை
தெரிதலாம் கற்றோர் செயல்.
எ - ன்:
அறுவகைப்பட்ட செய்யுள் விகாரமும், மூன்று வகைப்பட்ட
விகாரங்களும் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று.
இ - ள்:
மெலிக்கும் வழி மெலித்தலும், குறுக்கும் வழிக் குறுக்கலும்,
விரிக்கும் வழி விரித்தலும், தொகுக்கும் வழித் தொகுத்தலும், வலிக்கும் வழி
வலித்தலும், நீட்டும் வழி நீட்டலும் என்னும் அறுவகைப்பட்ட விகாரமும்;
தலைக்குறைத்தல், இடைக்குறைத்தல், கடைக்குறைத்தல் என்னும் மூன்று
வகைப்பட்ட விகாரமும் செய்யுளகத்து வந்தால், அவை வந்த வகை அறிந்து
முடிக்க எ-று.
அவை வருமாறு: குன்றிய லுகரத் திறுதி யாகும் என்பதுமெலித்தல்.
‘திருத்தார்நன் றென்னேன் றியேன்' என்பது குறுக்கல். ‘தண்ணந் துறைவன்'
என்பது விரித்தல். 1 ‘நீலுண்டுகிலிகை என்பது தொகுத்தல். ‘குறுத்தாட் பூதம்'
என்பது வலித்தல். ‘பாசிழை' என்பது நீட்டல். ‘மரையிதழ்' என்பது
தலைக்குறைத்தல். ‘ஓதி முது போத்து' என்பது இடைக் குறைத்தல். ‘அகலிரு
விசும்பி 2 னாஅல்' என்பது கடைக்குறைத்தல்.
-------------------------
1. இது தொல், சொல். எச்ச இயலில் உள்ள ‘குறைச்சொற் கிளவி
குறைக்கும்
வழி யறிதல்' என்னும் 57-ஆம் சூத்திரத்தின் உரையில்
சேனாவரையராலும்,
நச்சினார்க்கினிய ராலும் கடைக்குறை
விகாரத்திற்கு உதாரணமாகக்
காட்டப்பட்டிருக்கின்றது. தொகுத்தல்
விகாரம் பகுபதத்திலேதான் வரும்.
முதற்குறை முதலிய
மூன்றுவிகாரங்களும் பகாப்பதத்தில் வரும். இது
பகாப்பதத்தில்
வந்ததாகலின், தொகுத்தல் விகாரம் அன்று.
2. இதில் ஆரல் என்பது ஆல் என இடைக்குறைக்கப்பெற்ற தாகலின்
இடைக்குறை விகாரமே யாம்; கடைக்குறை விகாரம் அன்று; ஆரல் -
கார்த்திகை நாள் (செவ்வாயுமாம்). இவை ஏடு எழுதுவோரால் நேர்ந்த
பிழைகளாகும்.
|