‘தொல் குறைச் சொல்' என்றவதனாற், பழையதாக விகாரம் பெற்று வரும்
சொற்களல்லது தான் ஒரு சொல்லை விகாரப்படுத்தா தொழிக;
விகாரப்படுத்தின் வேறொரு பொருளாம் என்றவாறு. அவை காவிரி என்றால்,
இதனைத் தலைக்குறைக்கில் விரியாம்; இடைக்குறைத்தால் காரியாம்; கடைக்
குறைத்தால் காவியாம்; ஆன்ற பொருள் தெரியா விகாரம் பண்ணற்க
என்றவாறு.
(7)
பொருள்கோள்
68, அடிமொழி சுண்ண நிரனிறை விற்பூட்
டடிமறி யாற்று வரவும் - துடியிடையாய்
தாப்பிசை தாவின் மொழிமாற் றளைமறி
பாப்புப் பொருளோடொன் பான்.
எ - ன்:
ஒன்பது வகைப்பட்ட பொருள்கோள் ஆமாறு
உணர்த்துதல் நுதலிற்று.
இ - ள்:
அடிமொழி மாற்றும், சுண்ணமொழி மாற்றும், நிரனிறைப்
பொருள் கோளும், விற்பூட்டுப் பொருள் கோளும், அடிமறி மாற்றுப்
பொருள்கோளும், புனல் யாற்று வரவுப் பொருள்கோளும், தாப்பிசைப்
பொருள் கோளும், மொழிமாற்றுப் பொருள்கோளும், அளைமறிபாப்புப்
பொருள்கோளும் என ஒன்பது பொருள்கோள் ஆம் எ-று.
அவையும் சொல்லின் முடிபாலே பொருள் முடிந்து கிடந்தமையின்
இலக்கணஞ் சொல்ல வேண்டிற்றில்லை; என்னை?
சொல்லின் முடிவின் அப்பொருண் முடித்தல்
என்பது தந்திரவுத்தியாகலான்.
அவை வருமாறு:
குன்றத்து மேல குவளை குளத்துள
செங்கொடு வேரி மலர்
என்பதனைக் குன்றத்து மேல செங்கோடு வேரிமலர்
என்றும்,
குளத்துள குவளை என்றும் அடிதோறும் மொழிமாற்றிக் கொண்டமையான்
அடிமொழி மாற்று.
|