14நேமி நாதம்

முதனிலை


7.   காட்டும் உயிரும் கசதநப மவ்வரியும்
    ஈட்டிய வவ்வரியின் எட்டெழுத்து--மீட்டு
    ஞயவின்கண் மும்மூன்று நன்மொழிக்கு முன்னென்
    றயர்விலார் கட்டுரைத்தார் ஆய்ந்து.

  
  எ - ன்:  மொழிக்கு முதலாம் எழுத்துக்களைத் தெரிந்து உணர்த்துதல் நுதலிற்று,

    
இ - ள்: உயிர் பன்னிரண்டும், ககரவருக்கம் பன்னிரண்டும்,
சகரவருக்கம் பன்னிரண்டும்,1 தகரவருக்கம் பன்னிரண்டும், நகரவருக்கம்
பன்னிரண்டும், பகரவருக்கம் பன்னிரண்டும், மகரவருக்கம் பன்னிரண்டும்,
வகரவருக்கத்தில் எட்டும், ஞகரவருக்கத்தில் மூன்றும், யகரவருக்கத்தில்
மூன்றும்2 ஆக இத்தொண்ணூற்றெட்டு எழுத்தும் மொழிக்கு முதலாம் எ-று.

   
 உ - ம். அறம், ஆடை, இகல், ஈகை, உடம்பு, ஊழி, எண்கு, ஏகம்,
ஐயம், ஒக்கல், ஓங்கல், ஒளவியம் எனவும்;
-------------------------------- 
1. ஆசிரியர் தொல்காப்பியனார், சகரம், அ, ஐ, ஒள என்னு
மூன்றுயிர் நீங்கிய ஏனை உயிர்களோடு மொழிக்கு முதல் ஆம்
என்றார்.

                                      தொல். மொழி மரபு. சூ.29.

  
பிற்காலத்தில் தமிழில் சட்டி, சமழ்ப்பு என்பன முதலிய சொற்கள்
தோன்றினமையின், புதியன புகுதலாகச் சகரம் அகரத்துடனும் மொழி
முதல் வரும் எனக் கொள்ளுதலாம். இலக்கண விளக்க நூலாசிரியர் ஐ
ஒள அலவொடு சகரமும் (இல. எழு. அ. எழு, இயல். சூ,27.)
என்றதனை ஈண்டு நோக்குக. இந் நூலாசிரியரும், வீரசோழிய
நூலாசிரியரும், நன்னூலாசிரியரும் தமிழிற் பயின்று வழங்கும் வட

மொழியின் சொற்களை நோக்கிச் சகரம் பன்னிரண்டு உயிரோடும்
மொழிக்கு முதலாம் என்றார்கள்.

2. ஆசிரியர் தொல்காப்பியனார், யகரம், ஆகாரம் ஒன்று நீங்கிய

ஏனை உயிர்களோடு மொழிக்கு முதலாகாது என்றார்.

                               (தொல். எழு. மொழி. மரபு. சூ.32.)
  
இலக்கண விளக்க நூலாசிரியரும் இங்ஙனமே கூறினார்.

                                (இல. எழு. அ.எழு. இயல். சூ.27.)

  
இந் நூலாசிரியர் மூன்று உயிரோடு யகரம் மொழிக்கு முதலாம்

என்றார். அம்மூன்று உயிர் ஆ, ஊ, ஓ என்பன என்பது
உரையாசிரியர் காட்டிய உதாரணங்களால் விளங்குகின்றது. வீரசோழிய
நூலாசிரியரும், நன்னூலாசிரியரும் யகரம் அ, ஆ, உ, ஊ, ஓ, ஒள
என்னும் ஆறு உயிரோடும் மொழிக்கு முதலாம் என்றார்கள்.
இந்நூலாசிரியர் முதலியோர் யகரமொழி முதலாதலைப்பற்றி இங்ஙனம்

கூறியதற்கும் தமிழில் பயின்று வழங்கும் வடமொழியின் சொற்களே
காரணம் என்க.