உடம்படு மெய்கள்
13, மூன்றுநான் கொன்பான் உயிர்ப்பின்னும் அல்லாத
ஆன்ற உயிர்ப்பின்னும் ஆவிவரிற் - றோன்றும்
யகர வகரம் இறுதியிடத் தோரோர்
மகரங் கெடவகரம் ஆம்.
எ - ன்: உடம்படுமெய் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று.
இ - ள்:
இகர, ஈகார, ஐகாரம் என்னும் இம்மூன்றுயிரும்
நிலைமொழி ஈற்றில் நிற்க, வருமொழிக்கு முதலாக யாதானும் ஓருயிர் வரின்,
நடுவு யகர வொற்றுத் தோன்றும்; அகர, ஆகார, உகர, ஊகார, ஏகார,
ஓகாரம் என்னும் இவ்வாறுயிரும் நிலைமொழி ஈற்றில் நிற்க, வருமொழிக்கு
முதலாக யாதானும் ஓருயிர் வரின், நடுவு வகரவொற்றுத் தோன்றும்; உயிர்
வரின் நிலைமொழி இறுதியில் நின்ற மகரம் ஒரோவிடத்து அழிந்து வகரந்
தோன்றுதலும் உண்டு எ - று.
வ - று:
மணி, தீ, கதை என நிறுத்தி, அழகிது என உயிர்
முதலாகிய சொற்களை வருவித்து, இவ்விலக்கணத்தான் யகரவொற்றை நடுவு
மிகுத்து, ‘முன்னொற்றுண்டேற் செம்மை யுயிரேறுஞ் செறிந்து'1 என்பதனான்
ஒற்றின்மேல் உயிரை ஏற்றி மணியழகிது, தீயழகிது, கதை யழகிது, என
முடிக்க.
அல்லாத உயிர்கள் வருமாறு: விள, பலா, கடு,
பூ, சே, கோ என
நிறுத்தி, உயிர்முதலாகிய சொற்களை வருவித்து இவ்விலக்கணத்தான் நடுவு
வகரவொற்றை மிகுத்து, உயிரை ஏற்றி விளவழகிது, பலாவழகிது, கடுவழகிது,
பூவழகிது, சேவழகிது, கோவழகிது என முடிக்க.
மரம் என நிறுத்தி, உயிர் முதலாகிய
சொற்களை வருவித்து,
இவ்விலக்கணத்தான் மகரவொற்றைக் கெடுத்து, வகர வொற்றை மிகுத்து,
உயிரை யேற்றி மரவடி என முடிக்க. குண்டல வொளி, வெண்கலவோசை
என்பனவும் அது. பிறவும் அன்ன.
(13)
குற்றுகர முற்றுகர ஈற்று முடிபு
14. குற்றுகரம் ஆவி வரிற்சிதையும் கூறியவல்
லொற்றுமுன் றோன்றுதலும் உண்டாகு - முற்றோன்று
------------------------
இந்நூலின் இவ்வதிகாரம். சூ. 4.
|