சில உயிரீற்றுச் சந்திகளும் சில ஒற்றீற்றுச் சந்திகளும்
16. வாய்ந்த உயிர்ப்பின் வருமெழுத்தின் வர்க்கத்தொற்
றேய்ந்து புகுதும் இயல்புமாம் -- ஆய்ந்த
இறுதி வருமெழுத்தாம் ஈறராம் ஓரோர்
மறுவில்பதங் கெட்டு வரும்.
எ - ன்:
இதுவும் சில உயிரீற்றுச் சந்திகளும் ஒற்றீற்றுச் சந்திகளும்
முடியுமாறு உணர்த்துதல் நுதலிற்று.
இ - ள்:
உயிரீற்று நிலைமொழியின்பின் யாதானும் ஒரு சொல்
வருமாயின் வந்த வெழுத்தின் ஒற்றாதல், வர்க்கத் தொற்றாதல் மிக்கு
முடிவனவும், இயல்பாய் நின்று முடிவனவும் உள; நிலைமொழி ஈற்றினின்ற
னகரவொற்று வருமொழிமுதல் வந்த எழுத்தின் ஒற்றாய்த் திரியும்;
மகரமாய்த் திரிதலும் உண்டு; 1 நிலைமொழி இறுதியில் நின்ற அன் ஆர்
ஆகத் திரிதலும் உண்டு. நிலைமொழி ஈற்றில் நின்ற சொற்கள் கெட்டு
முடிவனவும் உள எ - று.
வ - று:
பலா, மா, சுறா, விளா, படை, ஆ, பூ, பை, வை, கை என
நிறுத்தி, ஏற்ற சொற்களை வருவித்துப், பலாக்காய், மாங்காய், சுறாத்தலை,
விளாம்பழம், படைத்தொழில், ஆந்தளிர், பூம்பொழில், பைந்நாகம், வைந்நுதி,
கைம்மணி என வரும்; அம்மணி, அவ்விரல், அஞ்ஞாலம் இவை
சுட்டின்முன் மிக்கவை. பிறவும் அன்ன.
‘இயல்புமாம்' என்பதனான் ஆகொண்டார், மாகொண்டார், நகைமதி,
வைவேல் என்பன இயல்பாய் முடிந்தன.
‘வாய்ந்த வுயிர்' என்ற மிகையான் இவ்விரண்டு முடிவும் பெற்று
முடிவனவும் உள. அவை கிளிகடிந்தார், கிளிக்கடிந்தார்; பனைபிளந்தார்,
பனைப்பிளந்தார் என வரும். பிறவும் அன்ன.
------------------------
1. இதற்குத் தட்டான் என நிறுத்தித் தட்டாங்குளம் என
உதாரணம் கொள்க. (இதனை உலக வழக்கிற் காண்க.)
தொல், எழுத்து. புள்ளிமயங்கியல். 55-ஆம் சூத்திர உரையில்
உரையாசிரியர் இளம்பூரணரும், நச்சினார்க்கினியரும் காட்டிய
‘சாத்தங் கொற்றன், கொற்றங் கொற்றன்' ‘சாத்தங்குடி கொற்றங்குடி'
என்னும் உதாரணங்களையும் ஈண்டு நோக்குக. இவற்றுள் ‘அன்'
என்னும் ஈறுகெட அம் என்னும் சாரியை தோன்றிற்று என அறிக.
ஈண்டு அச்சூத்திர உரையையும் நோக்குக.
|