என்றாராகலின், மூன்றிடமாவன: தன்மை, முன்னிலை, படர்க்கை என்பன.
முக்காலமாவன: இறப்பு, நிகழ்வு, எதிர்வு என்பன. இரண்டிடமாவன: வழக்கு,
செய்யுள் என்பன. இவ்வெட்டு முகத்தானும் ஆராயப்பட்டது சொல்
என்றவாறு.
இவ் வெட்டினையுஞ் சொல்ல ஒன்பதோத்தும், எழுபது சூத்திரமும்
வேண்டிற்றோ, எனின், வேண்டிற்று. எட்டின் புடை பெயர்ச்சிகளையும்
போக்கற ஆராய வேண்டுதலின் என்க.
(2)
திணை
3. மக்கள் நரகரே வானோர் எனும்பொருள்கள்
தொக்க உயர்திணையாம் தூமொழியாய் - மிக்க
உயிருள் ளனவும் உயிரில் லனவும்
செயிரில் அஃறிணையாம் சென்று.
எ - ன்:
உயர்திணைப் பொருளும் அஃறிணைப்பொருளும் ஆமாறு
உணர்த்துதல் நுதலிற்று.
இ - ள்:
மக்கள் என்றும், நரகர் என்றும், தேவர் என்றும்
சொல்லப்பட்டன உயர்திணைப் பொருளாம். இம்மூன்றினையுஞ் சொல்லும்
சொல் உயர்திணைச் சொல்லாம். இவர்கள் ஒழியக் கிடந்த உயிருள்ளனவும்,
உயிரில்லனவும் அஃறிணைப் பொருளாம். இவ்விரண்டனையுஞ்
சொல்லுஞ்சொல் அஃறிணைச் சொல்லாம் எ-று.
எனவே, உயர்திணைப் பொருளும், உயர்திணைச் சொல்லும்,
அஃறிணைப் பொருளும், அஃறிணைச் சொல்லும் எனச் சொல்லும்
பொருளும் வரையறுத்தானாம்.
(3)
பால்
4. ஒருவன் ஒருத்திபலர் ஒன்றுபல என்று
மருவியபால் ஐந்தும் வகுப்பின் - பொருவிலா
ஓங்கு திணைப்பால் ஒருமூன் றொழிந்தவை
பாங்கில் அஃறிணைப்பா லாம்.
எ - ன்:
உயர்திணை முப்பாலும் அஃறிணை யிருபாலும் ஆமாறு
உணர்த்துதல் நுதலிற்று;
|