சொல் அதிகாரம்59

    மரபு வழுவமைதியும் மரபு வழுவாமற் காத்தலும்

12. பெண்ணாண் ஒழிந்த பெயர்தொழில் ஆகியசொல்
   உண்மை இருதிணைமேல் உய்த்தறிக - எண்ணி
   இனைத்தென் றறிந்த சினைமுதற்பேர்க் கெல்லாம்
   வினைப்படுப்பின் உம்மை மிகும்.

 
    
எ - ன்: பெண்ணொழி மிகுசொல்லும், ஆணொழி மிகு சொல்லும்,
உம்மை யிடைச்சொல் மிகுவதோர் இடமும் உணர்த்துதல் நுதலிற்று.

    
இ - ள்: பெண்ணொழி மிகுசொல், ஆணொழி மிகுசொல்
என்பனவற்றைப் பெயரானும் தொழிலானும் உறழ நான்காம். இவற்றை
உயர்திணை அஃறிணையான் உறழ எட்டாம். அவையாவன:
உயர்திணையிடத்துப் பெயரிற் றோன்றும் பெண்ணொழி மிகுசொல்லும்,
தொழிலிற்றோன்றும் பெண்ணொழி மிகுசொல்லும், பெயரிற்றோன்றும்
ஆணொழி மிகுசொல்லும், தொழிலிற்றோன்றும் ஆணொழி மிகுசொல்லும்
என நான்கு வகைப்படும் என நான்கு காட்டியவழி, அஃறிணைமேலும் இந் நான்கும் வர எட்டாம். எண்ணி வரையறுக்கப்பட்ட சினைச்சொல்லும் முதற்சொல்லும் வினைப்படுத்துச்  சொல்லும்பொழுது, உம்மை கொடுத்துச் சொல்லுக எ-று.
 
      அவை வருமாறு: அரசன் நூறு மக்களொடும் வந்தான் என்றல், உயர்திணையிடத்துப் பெயரிற் றோன்றும் பெண்ணொழி மிகு சொல். கீழைச் சேரியாரும் மேலைச் சேரியாரும் பொருவர் என்றல், உயர்திணையிடத்துத் தொழிலிற் றோன்றும் பெண்ணொழி மிகு சொல். பெருந்தேவி பொறை யுயிர்த்த கட்டிற்கீழ் நால்வர்மக்கள் உளர் என்றல், உயர்திணையிடத்துப்
பெயரிற்றோன்றும் ஆணொழி மிகுசொல். இன்று இச்சேரியார் தை நீராடுவர்
என்றல், உயர்திணையிடத்துத் தொழிலிற்றோன்றும் ஆணொழி மிகுசொல்.
இவை நான்கும் உயர்திணை எனக் கொள்க.


      அரசன் நூறியானை உடையன் என்றல், அஃறிணையிடத்துப்
பெயரிற்றோன்றும் பெண்ணொழி மிகுசொல். இன்று இவ்வூர்ப்
பெற்றமெல்லாம் உழவொழிந்தன என்றல், அஃறிணையிடத்துத்