ஆகுபெயர்
23. ஒன்றன்பேர் ஒன்றற் குரைப்பதாம் ஆகுபெயர்
சென்றவைதாந் தம்முதலிற் சேர்தலோ - டொன்றாத
வேறொன்றிற் சேர்தல் என இரண்டாம் வேற்கண்ணாய்
ஈறு திரிதலுமுண் டீண்டு.
எ - ன்:
ஆகுபெயர் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று.
இ - ள்:
ஆகுபெயராவது ஒன்றன் பெயரை ஒன்றற்கு இட்டுச்
சொல்லுமது; அதுதான் தன்னொடு தொடுத்த பொருண்மேல் வருதலும்
தனக்கு எவ்வியைபும் இல்லாத தன்மேல் வருதலும் என இரண்டாம்,
அவைதாம் ஈறு திரிந்து நிற்கவும் பெறும் எ-று.
அவை வருமாறு: கடுவினது காய் தின்றானைக் கடுத்தின்றான் என்றும்,
புளியினது பழம் தின்றானைப் புளித் தின்றான் என்றும் இவை தம்முதலோடு
சார்ந்த ஆகுபெயர். பூ நட்டு வாழும், இலை நட்டு வாழும் இவை
சினையாகு பெயர். நீலம் அடுத்ததனை நீலம் என்றும், சிவப்பு
அடுத்ததனைச் சிவப்பு என்றும், ஏறுபட்ட இடத்தை ஏறு என்றும், அடி
பட்டதனை அடி என்றும், வெள்ளாளர் காணியிற் பிறந்ததனை வெள்ளாளர்
காணி என்றும், சாலியனாற் செய்யப் பட்டதனைச் சாலியன் என்றும்,
நாழியால் அளக்கப்பட்டதனை நாழி என்றும், துலாத்தால் எடுக்கப்பட்டதனைத் துலாம் என்றும்
வருவன தம்முதலுக்கு அடையாய்
வரும் ஆகுபெயர். இனித் தொல்காப்பியம், அவிநயம், வில்லி, வாளி
என்பன ஈறு திரிந்து வந்தன. பிறவும் அன்ன.
'சென்று' என்று மிகுத்துச் சொல்லியவதனால், இருபெயரொட்டாய்வரும்
ஆகுபெயரும் உள. அவை பொற்றொடி, வெள்ளாடை, கனங்குழை என்பன;
அன்மொழித் தொகையாய்க் காட்டப் பட்டனவாயினும், ஆகுபெயர்த்தன்மைக்கு ஈங்குப்பெறும்.
என்னை?
முதலிற் கூறுஞ் சினையறி கிளவியுஞ்
சினையிற் கூறு முதலறி கிளவியுஞ்
பிறந்தவழிக் கூறலும் பண்புகொள் பெயரும்
இயன்றது மொழிதலும் இருபெய ரொட்டும்
வினைமுத லுரைக்குங் கிளவியொடு தொகைஇ
யனைய மரபினவே யாகுபெயர்க் கிளவி. (தொல். வேற். மய.31)
என்றாராகலின்.
உருபு மயங்கியல் முற்றும்.
|