விரவுப்பேர் ஆமாறு
34. இயற்பேர் சினைப்பேர்
சினைமுதற்பேர் என்று
மயக்கிலா மூன்றனையும் வைத்துக் -
கயற்கண்ணாய்
பெண்ணானே பன்மை ஒருமையொடு பேர்த்துறழ
நண்ணும் விரவுப்பேர் நன்கு.
எ -
ன்: விரவுப்பெயர் ஆமாறு
உணர்த்துதல் நுதலிற்று.
இ -
ள்: பெண், ஆண், பன்மை,
ஒருமை என்னும் நான்கனோடும்
இயற்பெயர், சினைப்பெயர், சினைமுதற் பெயர் என்னும் மூன்றனையும்
உறழப் பன்னிரண்டும் விரவுப் பெயராம் எ-று.
வரலாறு: பெண்மை இயற்பெயர், பெண்மைச் சினைப்பெயர்,
பெண்மைசுட்டிய சினைமுதற்பெயர் எனவும்: ஆண்மை இயற்பெயர்,
ஆண்மைச் சினைப் பெயர், ஆண்மை சுட்டிய சினைமுதற் பெயர்: எனவும்:
பன்மை யியற்பெயர், பன்மைச் சினைப்பெயர், பன்மை சுட்டிய
சினைமுதற்பெயர் எனவும்; ஒருமை யியற்பெயர், ஒருமைச் சினைப்பெயர்,
ஒருமை சுட்டிய சினைமுதற்பெயர் எனவும் இவை பன்னிரண்டும்
விரவுப்பெயராம் என்றவாறு.
அவை வருமாறு: சாத்தி - இயற்பெயர்: முடத்தி - சினைப்பெயர்:
முடக்கொற்றி - சினைமுதற்பெயர் என்னும் பெண்மைப் பெயர், வந்தாள்
என்றும் வந்தது என்றுமாம். என்னை?
"பெண்மை சுட்டிய எல்லாப் பெயரும்
ஒன்றற்கும் ஒருத்திக்கும் ஒன்றிய நிலையே"
(தொல். பெய. 26)
என்றாராகலின்.
சாத்தன் - இயற்பெயர், முடவன் - சினைப்பெயர், முடக் கொற்றன் -
சினைமுதற்பெயர் என்னும் ஆண்மைப் பெயர், வந்தான் என்றும் வந்தது
என்றுமாம். என்னை?
"ஆண்மை சுட்டிய எல்லாப் பெயரும்
ஒன்றற்கும் ஒருவற்கும் ஒன்றிய நிலையே"
(தொல். பெய. 27)
என்றாராகலின்.
|