யானை - இயற்பெயர், நெடுங்கழுத்தல் - சினைப்பெயர்,
நெடுந்தாள்யானை - சினைமுதற்பெயர் என்னும் பன்மைப்பெயர் வந்தான்,
வந்தாள், வந்தன, வந்தது என்றுமாம். என்னை?
பன்மை சுட்டிய எல்லாப் பெயரும்
ஒன்றே பலவே ஒருவ ரென்னும்
என்றிப் பாற்கு மோரன் னவ்வே
(தொல். பெய. 28)
என்றாராகலின்.
கோதை - இயற்பெயர், செவியிலி - சினைப்பெயர்,
கொடும்புறமருதி
- சினைமுதற்பெயர் என்னும் ஒருமைப்பெயர் வந்தான், வந்தாள், வந்தது
என்றாம். என்னை?
ஒருமை சுட்டிய எல்லாப் பெயரும்
ஒன்றற்கும் ஒருவற்கும் ஒன்றிய
நிலையே (தொல். பெய. 29)
என்றாராகலின்.
இதுவும் அது
35. தந்தைதாய் என்பனவும் சார்ந்த முறைமையால்
வந்த மகன் மகளோ டாங்கவையு - முந்திய
தாந்தானு நீநீயி ரென்பனவும் தாழ்குழலாய்
ஆய்ந்த விரவுப்பேர் ஆம்.
எ - ன்:
இதுவும் விரவுப் பெயர் ஒழிபு கூறுதலை உணர்த்துதல்
நுதலிற்று.
இ - ள்: தந்தை, தாய் என்பனவும்; முறைமைக்கண் வந்த மகன்,
மகள் என்பனவும்; தாம் தான் என்பனவும்; நீ நீயிர் என்பனவும்
விரவுப்பெயராம் எ-று.
அவை வருமாறு: தந்தை வந்தான், தந்தை வந்தது; தாய் வந்தாள்,
தாய் வந்தது; சாத்தி மகன் வந்தான்; சாத்தி மகன் வந்தது; சாத்தி மகள்
வந்தாள்; சாத்தி மகள் வந்தது; தாம் வந்தார், தாம் வந்தன; தான் வந்தான்,
தான் வந்தது என. என்னை?
பெண்மை முறைப்பெய ராண்மை முறைப்பெயரென்
றாயிரண் டென்ப முறைப்பெயர் நிலையே.
(தொல். பெய. 25)
|