இறப்பி னிகழ்வி னெதிர்வி னென்றா
வம்முக் காலமுங் குறிப்பொடுங் கொள்ளும்
மெய்ந்நிலை யுடைய தோன்ற லாறே
(தொல். வினை. 3)
குறிப்பினும் வினையினு நெறிப்படத் தோன்றிக்
காலமொடு வரூஉம் வினைச்சொல் லெல்லாம்
உயர்திணைக் குரிமையும் அஃறிணைக் குரிமையும்
ஆயிரு திணைக்குமோ ரன்ன வுரிமையும்
அம்மூ வுருபின தோன்ற லாறே
(தொல். வினை. 4)
என்றாராகலின்,
40. அம் ஆம் எம் ஏமுங் கடதறமேல் ஆங்கணைந்த
உம்மும் உளப்பாட்டுத் தன்மையாம் - தம்மொடு
புல்லுங் குடுதுறுவும் என்ஏனும் பொற்றொடியாய்
அல்லும் தனித்தன்மை யாம்.
எ-ன்: உளப்பாட்டுத்தன்மையும், தனித்தன்மையும் ஆமாறு
உணர்த்துதல் நுதலிற்று.
இ-ள்: அம், ஆம், எம், ஏம் என்னும் இறுதி வினைச்சொல்லும்,
கடதறக்களை ஊர்ந்து வந்த உம்மை இறுதியாகிய வினைச்சொல்லும்,
தன்னையும் பிறரையும் உளப்படுக்கும் உளப்பாட்டுத் தன்மைச்சொல்லாம்;
குடுதுறு என்னும் நான்கும் இறுதியாகிய குற்றியலுகரமும், என், ஏன், அல்
என்பன இறுதியாய் வரும் வினைச் சொல்லும் தனித்தன்மையாம் எ-று.
அவை வருமாறு: அம்: உண்டனம், உண்ணாநின்றனம், உண்குவம்;
ஆம்: உண்டாம், உண்ணாநின்றாம், உண்பாம்; எம்; உண்டனெம்,
உண்ணாநின்றனெம், உண்குவெம்; ஏம்; உண்டேம். உண்ணாநின்றேம்,
உண்பேம் எனவும்; உம்மொடு வரூஉம் கடதறக்கள்; உண்கும், உண்டும்,
வருதும், சேறும் எனவும் வருவன, தன்னையும் முன்னின்றாரையும்
படர்க்கையாரையும் உளப்படுக்கும் உளப்பாட்டுத் தன்மை என அறிக.
உண்குயான், உண்டுயான், வருதுயான், சேறுயான் எனவும்; என்:
உண்டனென் உண்ணாநின்றனென், உண்குவென் எனவும்;
|