எ - ன்: உயர்திணைத்தன்மையும் படர்க்கையும் உணர்த்தி,
அஃறிணைப் படர்க்கைவினை உணர்த்துதல் நுதலிற்று.
இ - ள்:
சொல்லப்பட்ட அ, ஆ, வ இறுதியாகிய வினைச்சொல்லும்,
துடுறு இறுதியாகிய வினைச்சொல்லும் அஃறிணைப் பன்மைப் படர்க்கையும்,
ஒருமைப் படர்க்கையும் ஆம்; எவன் என்னும் சொல் அவ்விருபாற்கும்
உரித்து எ-று.
அவை வருமாறு: அ: உண்டன, உண்ணாநின்றன, உண்பன, கரிய,
செய்ய; ஆ: உண்ணா, தின்னா; வ: உண்குவ, தின்குவ என அ, ஆ, வக்கள்
அஃறிணைப் படர்க்கைப் பன்மை யாயின.
து: உண்டது, உண்ணாநின்றது, உண்பது, கரிது, செய்து; று: கூயிற்று,
தாயிற்று; டு: குண்டுகட்டு, குறுந்தாட்டு எனத் துறுடுக்கள் அஃறிணை
ஒருமைப் படர்க்கையாயின.
எவன் அது, எவன் அவை என எவன் என்னும் வினாஅவ்விருபாற்கும்
ஏற்றவாறு கண்டுகொள்க. என்னை?
அத்திணை மருங்கி னிருபாற் கிளவிக்கும்
ஒக்கு மென்ப வெவனென் வினாவே
(தொல்.
வினை. 22)
என்றாராகலின்.
(4)
முன்னிலை வினைமுற்று
43. மின்னும் இர்ஈரும் விளம்பும் இருதிணையின்
முன்னிலைப் பன்மைக்கா மொய்குழலாய் - சொன்ன
ஒருமைக்கண் முன்னிலையாம் இ ஐ ஆய் உண்சேர்
பொருஎன் பனவும் புகல்.
எ - ன்:
உயர்திணை வினையும் அஃறிணை வினையும் உணர்த்திய
முறையே விரவுவினை உணர்த்துவான் எடுத்துக் கொண்டார்; அவற்றுள்,
இச்சூத்திரம் முன்னிலைப் பன்மையும் முன்னிலையொருமையும் ஆமாறு
உணர்த்துதல் நுதலிற்று.
இ - ள்:
மின், இர், ஈர், இறுதியாய் வரும் வினைச் சொற்கள்
இருதிணைக்கு முன்னிலைப் பன்மையாம்; இ, ஐ, ஆய் இறுதியாய் வரும்
வினைச்சொற்கள் முன்னிலை.
|