சொல் அதிகாரம்97

வினை எச்சம்


44.     செய்து செயச்செய்யாச் செய்யிய   செய்தெனச்
         செய்பு செயின்செயற் கென்பனவும் - மொய்குழலாய்
      பின்முன்பான் பாக்கும் பிறவும் வினையெச்சச்
      சொன்முன் வகுத்தோர் துணிவு.

     
எ - ன்: வினையெச்சமாமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இதுவும்
விரவுவினை என்க.)

          
இ - ள்: செய்து என்றும், செய என்றும், செய்யா என்றும், செய்யிய
என்றும், செய்தென என்றும், செய்பு என்றும், செயின் என்றும், செயற்கு
என்றும், பின் முன்பான் பாக்கு  என்றும் வருவனவும், பிறவும்
இருதிணைக்கும்  வினையெச்சமாம் எ-று.

      ‘துணிவு' என்று மிகுத்துச் சொல்லியவதனால், செய்து என்னும்
வினையெச்சமும் செய்யா என்னும் வினையெச்சமும் செய்பு என்னும்
வினையெச்சமும் முதல்வினை கொண்டன்றி முடியா; ஏனை யெச்சங்கள்
வினைமுதலானும் வந்தியையும் வினைநிலையானும் முடியும் எனக் கொள்க.

    அவை வருமாறு: செய்து என்னும் எச்சம் உழுது வந்தான், செய்யா
என்னும் எச்சம் உண்ணா வந்தான், செய்பு என்னும் எச்சம் உண்குபு
வந்தான் இவை வினைமுதல் கொண்டு வந்தன.

    அன்றியும், இவை மூன்றும் சினைவினை தோன்றின விடத்துச்
சினையொடு முடியாது முதலொடு முடியினும் அமையும்; முதலொடு முடியாது
சினையொடு முடியினும் அமையும்.

   அவை: கையிற்று வீழ்ந்தது என்பது கையிற்று வீழ்ந்தான் என்றுமாம்.
கையிறா வீ்ழ்ந்தது என்பது கையிறா வீழ்ந்தான் என்றுமாம். கையிறுபு
வீழ்ந்தது என்பது கையிறுபு வீழ்ந்தான் என்றுமாம்.

   ஏனை எச்சங்கள் வருமாறு: மழை பெய்தென அறம் பெற்றது; இதற்கு
வினைமுதல் மழை என்க, இது வினைமுதல் கொண்டு முடிந்தது. மழை
பெய்தென உலகம் ஆர்த்தது; இது பிறவினை கொண்டு முடிந்தது. பிறவும்
இம்முடிவு காட்டி முடிக்க. தேடின பின் சென்றான், தேடினமுன் வந்தான்,
உண்பான் வந்தான்,
--------------------------
 *  செய்புசெ யின்செ யியர்செ யற்கும்  எனவும் பாடம்.