பொருளணியியல்99

எ-டு : 'மின்னோ பொழிலின் விளையாடும் இவ்வுருவம்
பொன்னோ வெனுஞ்சுணங்கிற் பூங்கொடியோ - என்னோ
திசையுலவுங் கண்ணுந் திரள்முலையுந் தோளும்
மிசையிருளுந் தாங்குமோ மின் '

இ-ள்: இப்பொழிலின்கண்ணே விளையாடுகின்ற இவ்வுருவம் , மின்னினது உருவமோ ? அன்றியே , பொன்னோவென்று ஐயுறு நிறத்தையுடைய சுணங்கினையுடைத்தாய் இருப்பதோர் உருவத்தை யுடைத்தாகிய கொடியோ ? யாதோ ? என்று ஐயுறுகின்ற நெஞ்சமே ! திக்கனைத்தும் பரந்து உலாவித் திரிகின்ற கண்ணினையும் , திரண்ட முலையினையும் , இரண்டு தோளினையும் , தன்மீதே இருளினையுந் தாங்கி யிருப்பதொரு மின்னும் உண்டோ ? சொல்லுவாயாக எ-று .

மின்னோ கொடியோ என்று ஐயுற்று , மின் அன்மை துணிதலால் , பூங்கொடியோ என்ற ஓகாரம் தெரிநிலைக்கிளவியான் அன்மையை விலக்கிற்று .

வி-ரை: இது தலைவன் தலைவியை வியந்ததாகும் .

தலைவியை முதற்கண் மின்னோ , பூங்கொடியோ என ஐயுற்றவன் பின்னர் , அம்மின்னல்தான் கண்ணும் , முலையும் , தோளும் , இருளும் தாங்குமோ என்பதால் அதனை விலக்கிப் பெண் என உணருதலின் , இது ஐய விலக்காயிற்று .

முன்னவிலக்குப் பிற அணிகளுடன் கூடிவரும் எனல்

45. வேற்றுப்பொருள் சிலேடை ஏதுவென் றின்னவை
மேற்கூ றியற்கையின் விளங்கித் தோன்றும் .

எ-ன் , இதுவும் இவ்வலங்காரம் பிற அலங்காரங்களோடு கூடி வருமாறு உணர்த்துதல் நுதலிற்று .

இ-ள்: வேற்றுப்பொருள் வைப்பும் , சிலேடையும் , ஏதுவும் என்று சொல்லப்பட்டவைகளோடு இவ்விலக்கு என்னும் அலங்காரம் கூடி மேற் சொல்லப்பட்ட அலங்காரங்கள் போல வரும் எ-று .

அவற்றுள் ,

1. வேற்றுப்பொருள்வைப்பு விலக்கு

எ-டு : 'தண்கவிகை யாலுலகந் தாங்கும் 1அனபாயன்
வெண்கவிகைக் குள்ளடங்கா வேந்தில்லை - 2எங்கும்
மதியத் துடனிரவி வந்துலவும் வானிற்
பொதியப் படாத பொருள் '

இ-ள்: உள்ளங் குளிர்ந்து கொடுக்கும் கொடையையுடைய அனபாயச் சோழனுடைய வெண்கொற்றக் குடைக்கீழ் அடங்காத வேந்தர் எங்கும் இல்லை ; மதியும் இரவியும் தவழுகின்ற ஆகாயத்தில் அடங்காத பொருளும் எங்கும் இல்லை எ-று .


1. ' சயதுங்கன் ' என்பதும் , 'சனநாதன்' என்பதும் பாடங்கள் .

2. ' உண்டோ ' என்பதும் பாடம் .