எ-ன்: நிறுத்த முறையானே தன்மேம்பாட்டுரை என்னும் அலங்காரம் உணர்த்துதல் நுதலிற்று. இ-ள் ; ஒருவன் தன்னைத்தானே புகழ்வது , தன் மேம்பாட்டுரை என்னும் அலங்காரமாம் எ - று . எ-டு ; ' எஞ்சினா ரில்லை யெனக்கெதிரா இன்னுயிர்கொண்(டு) அஞ்சினார் அஞ்சாது போயகல்க - வெஞ்சமத்துப் பேரா தவராகத் தன்றிப் பிறர்முதுகிற் சாராவென் கையிற் சரம் ' இதனாற் போந்த பொருள், எனக்கு எதிராய் முன் நின்று பொருது பிழைத்தார் இல்லை என்றவாறு. வி-ரை, இ-ள் ; கொடிய' போரில் எனக்கு எதிராக வந்து முன்னின்று பொருது, தமது இனிய உயிரைத் தப்புவித்துக் கொண்டு பிழைத்தார் எவருமில்லை ; எனக்கு அஞ்சியவர்கள் அஞ்சாது விலகிச் செல்வாராக ; என்கையால் எய்யப்படும் அம்புகள், புறங்கொடுத்துச் செல்லாதவர்களின் மார்பிலன்றி, புறங் கொடுப்பாரது முதுகில் சேரமாட்டா என்பதாம். இது ஒன்னாதார் படைகெழுமித் தன் ஆண்மை எடுத்துரைத்தலின் தன் மேம்பாட்டுரை ஆயிற்று. இதனைப் புறப்பொருள் இலக்கணத்தில் 'நெடுமொழிவஞ்சி' என்றும், 'நெடுமொழி கூறல் 'என்றும் கூறுவர். (44)
|