அம் முன் இகரம் யகரம் என்ற இவை ஒத்து எய்தின் ஐஇசைக்கும் - அகரத்தின்முன் இகரமும் யகரமும் என்று சொல்லப்பட்ட இவை தம்முள் ஒத்துப் பொருந்தினால் ஐ என்னும் நெட்டெழுத்து ஒலிக்கும் , அவ்வோடு உவ்வும் வவ்வும் (ஒத்து) ஓரன்ன (எய்தின்) ஒள (இசைக்கும்)-அகரத்தோடு உகரமும் வகர மெய்யும் தம்முள் ஒத்து ஒரு தன்மையனவாகப் பொருந்தினால் ஒள என்னும் நெட்டெழுத்து ஒலிக்கும் . யகர வகர மெய்கள் நடுவிலே கலக்கும் எனக் கொள்க . மொழிந்த பொருளோடொன்ற அவ்வயின் மொழியாத தனையும் முட்டின்று முடித்தல் என்னும் உத்தியால் - அகரக் கூறும் இகரக் கூறும் தம்முள் ஒத்து எகரம் ஒலிக்கும் , அகரக் கூறும் உகரக் கூறும் தம்முள் ஒத்து ஒகர மொலிக்கும் எனக் கொள்க. * சந்தி+அக்ஷரம்=கூட்டு எழுத்து(ஐ=அ+இ அல்லது அ+ய்; ஒள=அ+உ அல்லது அ+வ்)
|