பதவியல்

விகுதி

 
140அன் ஆன் அள் ஆள் அர் ஆர் பம்மார்
அ ஆ குடுதுறு என்ஏன் அல்அன்
அம்ஆம் எம்ஏம் ஓமொ டும்மூர்
கடதற ஐஆய் இம்மின் இரஈர்
ஈயர் கயவு மென்பவும் பிறவும்
வினையின் விகுதி பெயரினும் சிலவே.
 
ஆறுமுகநாவலர் காண்டிகையுரை
 
அன்......என்பவும் பிறவும் - அன் முதல் முப்பத்தேழாகச் சொல்லப்பட்டவைகளும் இவை போல்வன பிறவும் , வினையின் விகுதி - தெரிநிலை வினைமுற்றுப் பகுபதங்களின் விகுதிகளாகும் , பெயரினும் சில - பெயர்ப் பகுபதங்களிலும் இவற்றுள் சில விகுதிகளாகும் .

உம் ஊர் க ட த ற - உம் என்பது ஏறிய க , ட , த , ற , ஒற்றுக்கள் . அவை கும் , டும் , தும் , றும் என்பன . அன் விகுதி தன்மைக்கு எதிரது போற்றல் என்னும் உத்தியால் சேர்க்கப்பட்டது ஆகலின் , வலியுறுத்தற்குப் பின்னும் கூறினார் .

நடந்தனன் , நடந்தான் - இவை ஆண்பாற் படர்க்கை .
நடத்தனள் , நடந்தாள் - இவை பெண்பாற் படர்க்கை .
நடந்தனர் , நடந்தார் , நடப்ப , நடமார் - இவை பல்லோர் படர்க்கை .
நடந்தன , நடவா - இவை பலவின் படர்க்கை .
நடக்கு , உண்டு , நடந்து , சேறு , நடந்தனென் , நடந்தேன் , நடப்பல் , நடப்பன் - இவை ஒருமைத் தன்மை .
நடந்தது , கூயிற்று , குண்டுகட்டு - இவை ஒன்றன் படரக்கை .
நடப்பம் , நடப்பாம் , நடப்பெம் , நடப்பேம் , நடப்போம் , நடக்கும் , உண்டும் , நடந்தும் , சேறும் - இவை தன்மைப் பன்மை .
நடந்தனை , நடந்தாய் , நடத்தி - இவை ஒருமை முன்னிலை .
நடமின் நடந்தனிர் , நடந்தீர் - இவை பன்மை முன்னிலை .
நிலீயர் , நடக்க , வாழிய - இவை வியங்கோள் .
நடக்கும் - இது செய்யும் என்னும் முற்று .

பிறவும் என்றதனால் மறால் , அழேல் , சொல்லிக் காண் என ஆல் , ஏல் , காண் முதலிய விகுதிகளும் வரும் .

வினைக் குறிப்பு முற்றுக்கள் குறிப்பாகக் காலங்காட்டுவன ஆதலால் , இவ் விகுதிகளுள்ளே தாமே காலங்காட்டும் விகுதிகள் ஒழித்து ஒழிந்த அன் , ஆன் , அள் , ஆள் , அர் , ஆர் , அ , டு , து , று , என் , ஏன் , அம் , ஆம் , எம் , ஏம் , ஒம் , ஐ , ஆய் , இ , இர் , ஈர் என்னும் இருபத்திரண்டு விகுதிகளோடு வரும் எனக் கொள்க .

கரியன் , கரியான் , கரியள் , கரியாள் , கரியர் , கரியார் , கரியன , குறுந்தாட்டு , கரிது , குழையிற்று , கரியென் , கரியேன் , கரியம் , கரியாம் , கரியெம் , கரியேம் , கரியோம் , கரியை , கரியாய் , வில்லி , கரியிர் , கரியீர் என வரும் .

பெயரினும் சில என்றதனால் , இவ் விகுதிகளுள் அன் , ஆன் , அள் , ஆள் , அர் , ஆர் , மார் , அ , து , இ , என்னும் பத்தோடு , மன் , மான் , கள் , வை , தை , கை , பி , முன், அல் , ன் , ள் , ர் , வ் என்னும் பதின்மூன்றும் பிறவும் பெயர் விகுதிகளாம் .

குழையன் , வானத்தான் , குழையள் , வானத்தாள் , குழையர் , வானத்தார் , தேவிமார் , குழையன , யாது , பொன்னி , வடமன் , கோமான் , கோக்கள் , அவை , எந்தை , எங்கை , எம்பி , எம்முன் , தோன்றல் , பிறன் , பிறள் , பிறர் , அவ் என வரும் .

இன்னும் , வினையின் விகுதி பெயரினும் சில என்றதனாலும் , பிறவும் என்றதனாலும் , பல வகைப்பட்ட வினைகளுக்கும் பெயர்களுக்கும் இவ் விகுதிகளுள் அடங்கியும் அடங்காதும் வரும் விகுதிகள் எல்லாம் கொள்ளப்படும் .

தெரிநிலைவினைப் பெயரெச்ச விகுதிகள்அ , உம் , என்னும் இரண்டுமாம் ,

செய்த , செய்கின்ற , செய்யும் என வரும் .

குறிப்புவினைப் பெயரெச்ச விகுதிஅ ஒன்றேயாம் . உம் விகுதி இடைநிலை ஏலாது தானே எதிர்காலம் காட்டலால் குறிப்புவினைப் பெயரெச்சத்துக்கு வாராது .

கரிய என வரும் .

தெரிநிலை வினையெச்ச விகுதிகள்உ , இ , ய , பு , ஆ , ஊ , என அ , இன் , ஆல் , கால் , ஏல் , எனின் , ஆயின் , எனும் , கு , இய , இயர் , வான் , பான் , பாக்கு , கடை , வழி , இடத்து, உம், மல், மை, மே என்னும் இருபத்தெட்டும் பிறவுமாம். இவற்றுள் , இறுதியில் கூறிய மல் , மை , மே என்னும் மூன்று விகுதிகளும் எதிர்மறையில் வரும்.

நடந்து, ஓடி, போய், உண்குபு, உண்ணா, உண்ணூ, உண்ணென, உண்ண, உண்ணின், உண்டால், உண்டக்கால், உண்டானேல், உண்டானெனின், உண்டானாயின், உண்டானேனும், உணற்கு, உண்ணிய, உண்ணியர், வருவான், உண்பான், உண்பாக்கு, செய்தக்கடை, செய்தவழி , செய்தவிடத்து , காண்டலும் , உண்ணாமல், உண்ணாமை, உண்ணாமே என வரும்.

குறிப்பு வினையெச்ச விகுதிகள்அ, றி, து, ஆல், மல், கால், கடை, வழி, இடத்து என்னும் ஒன்பதும் பிறவுமாம்.

மெல்ல, அன்றி, அல்லது, அல்லால், அல்லாக்கால், அல்லாக்கடை, அல்லாவழி, அல்லாவிடத்து என வரும்.

தொழிற்பெயர் விகுதிகள்தல், அல், அம், ஐ, கை, வை, கு, பு, உ, தி, சி, வி, உள், காடு, பாடு, அரவு, ஆனை, மை, து என்னும் பத்தொன்பதும் பிறவுமாம்.

நடத்தல், ஆடல், வாட்டம், கொலை, நடக்கை, பார்வை, போக்கு, நடப்பு, வரவு, மறதி, புணர்ச்சி, புலவி, விக்குள், சாக்காடு, கோட்பாடு, தோற்றரவு, வாரானை, நடவாமை, பாய்த்து என வரும்.

மை விகுதி, செய்தமை, செய்கின்றமை என இறந்தகால இடைநிலை நிகழ்கால இடைநிலைகளோடு கூடியும் வரும்.

துவ் விகுதி, அவர் செய்தது, செய்கின்றது, செய்வது என முக்கால இடைநிலைகளோடு கூடியும் வரும்.

பண்புப்பெயர் விகுதிகள்மை, ஐ, சி, பு, உ, கு, றி, று, அம், நர் என்னும் பத்தும் பிறவுமாம்.

நன்மை, தொல்லை, மாட்சி, மாண்பு , மழவு, நன்கு, நன்றி, நன்று, நலம், நன்னர் என வரும்.

பிறவினை விகுதிகள்வி, பி, கு, சு, டு, து, பு, று என்னும் எட்டுமாம்.

செய்வி, நடப்பி, போக்கு, பாய்ச்சு , உருட்டு, நடத்து, எழுப்பு, துயிற்று என வரும்.

கரை, தேய் என வரும் தன்வினை பிறவினைகளுக்குப் பொதுவாகிய முதல் நிலைகள் , சிறுபான்மை இவ் விகுதி வேண்டாது.

கரைத்தான், தேய்த்தான்; கரைத்திலன், தேய்த்திலன்; கரைக்கின்றான், தேய்க்கின்றான்; கரைக்கின்றிலன், தேய்க்கின்றிலன் , கரைப்பான், தேய்ப்பான், கரைக்கான், தேய்க்கான் எனப் பிறவினைப் பொருளைத் தரும்போது, வல்லெழுத்துமிக்கும்.

கரைந்தான் , கரைந்திலன் , கரைகிறான், கரைகின்றிலன், கரைவான், கரையான் எனத் தன்வினைப் பொருளைத் தரும்போது, வல்லெழுத்து மிகாதும் வரும் என்றறிக.

இ, ஐ, அம் என்னும் ழூன்று விகுதிகளும் வினைமுதற்பொருளையும் செயப்படுபொருளையும் கருவிப்பொருளையும் உணர்த்தும்.

அலரி, பறவை, எச்சம் என்பன வினைமுதற் பொருளை உணர்த்தின.

ஊருணி, தொடை, தொல்காப்பியம் என்பன செயப்படு பொருளை உணர்த்தின.

மண்வெட்டி, பார்வை, நோக்கம் என்பன கருவிப் பொருளை உணர்த்தின.

விடு, ஒழி விகுதிகள் துணிவுப் பொருளை உணர்த்தும்.

செய்துவிட்டான், செய்தொழிந்தான் எனவரும்.

கொள் விகுதிவினைப்பயன் வினைமுதலைச் சென்று அடைதலாகிய தற்பொருட்டுப் பொருளை உணர்த்தும்.

அடித்துக்கொண்டான் என வரும்.

படு, உண் விகுதிகள்செயப்பாட்டு வினைப்பொருள் உணர்த்தும்.

கட்டப்பட்டான், கட்டுண்டான் என வரும்.

மை வகுதிதன்மைப்பொருள் உணர்த்தும்.

பொன்மை, ஆண்மை என வரும்.

இரு, இடு என்பன தமக்கென வேறு பொருளின்றிப் பகுதிப்பொருள் விகுதியாய் வரும்.

எழுந்திருக்கின்றான், உரைத்திடுகின்றான் என வரும்.

முன்னிலை ஏவல் ஒருமை ஆய் விகுதியும், பெயரெச்ச விகுதியும், தொழிற்பெயர் விகுதியும் வினை முதற் பொருளை உணர்த்தும் இகர விகுதியும், செயப்படு பொருளை உணர்த்தும் ஐ விகுதியும் , பகுதியோடு புணர்ந்து பின்கெடுதலும் உண்டு . கெடினும் புணர்ந்து நின்றாற் போலவே தம் பொருளை உணர்த்தும்.

நீ நட, நீ நடப்பி, நீ செல் என்பவைகளிலே ஆய் விகுதி புணர்ந்து கெட்டது.

கொல் களிறு, ஓடாக் குதிரை என்பவைகளிலே பெயரெச்ச விகுதிகள் புணர்ந்து கெட்டன.

அடி, கேடு, இடையீடு என்பவைகளிலே தல் என்னும் தொழிற்பெயர் விகுதி புணர்ந்து கெட்டது.

காய், தளிர், பூ, கனி, திரை, நுரை, அலை என்பவைகளிலே வினைமுதற் பொருள் உணர்த்தும் இகர விகுதி புணர்ந்து கெட்டது.

ஊண், தீன், கோள் என்பவைகளிலே செயப்படு பொருள் உணர்த்தும் ஐகார விகுதி புணர்ந்து கெட்டது.

சிறுபான்மை வரிப்புனைபந்து என்பதில், வரிந்து என்னும் வினையெச்ச விகுதியும்,

கொள்வாரும் கள்வருநேர் என்பதில் நேர்வர் என்னும் முற்று விகுதியும் கெட்டு வந்தன.

இவ்வாறே பிற விகுதிகளுள்ளும் சில கெட்டுவரும் எனவும் கொள்க.