பதவியல்

வடமொழி ஆக்கம்
ஆரிய மொழி வடமொழிஆதற்குச் சிறப்பு விதி

 
147அவற்றுள்:-
ஏழாமுயி ரிய்யு மிருவுமை வருக்கத்
திடையின் மூன்று மவ்வம் முதலும்
எட்டே யவ்வு முப்பது சயவும்
மேலொன்று சடவு மிரண்டு சதவும்
மூன்றே யகவு மைங்திரு கவ்வும்
ஆவீ றையு மீயீ றிகரமும் .
 
ஆறுமுகநாவலர் காண்டிகையுரை
 
அவற்றுள் - முன்னே திரியுமென்ற சிறப்புஎழுத்துக்களுள் , ஏழாம் உயிர் இய்யும் இருவும் - ஏழாம் உயிரெழுத்து இகரமாகவும் இருவாகவும் திரியும் , ஐ வருக்கத்து இடையின் மூன்றும் அவ்வம் முதலும் -ஐந்து வருக்கங்களிலும் இடைநின்ற மும்மூன்று எழுத்தும் அவ்வவ் வருக்கத்தின் முதலெழுத்தாகத் திரியும் , எட்டு யவ்வும்-எட்டாம் மெய்யாகிய ஐகாரம் மொழியிடையில் யகரமாகவும் திரியும் , முப்பது சயவும் - முப்பதாம் மெய்யாகிய எழுத்து மொழி முதலில் சகரமாகவும் இடையில் ஏற்றபெற்றி சகரமாகவும் யகரமாகவும் திரியும் , மேல் ஒன்றுசடவும் - முப்பத்தொராம் மெய் (ஷ) எழுத்து மொழி முதலிற் சகரமாகவும் இடையிலுங் கடையிலும் டகரமாகவும் திரியும் , இரண்டு சதவும்-முப்பத்திரண்டாம் மெய்யாகிய எழுத்து மொழி முதலில் சகரமாகவும் இடையில் ஏற்றபெற்றி சகரமாகவும் தகரமாகவும் திரியும் , மூன்று அகவும்-முப்பத்து மூன்றாம் மெய்யாகிய எழுத்து மொழி முதலில் அகரமாகவும் இடையிலும் கடையிலும் கரமாகவும் திரியும் , ஐந்து இரு கவ்வும் - முப்பத்தைந்தாம் மெய்யாகிய கடிகாரம் இரண்டு ககரமாகத் திரியும் , ஆ ஈறு ஐயும்-பொது எழுத்துக்களுள்ளே மொழி இறுதி ஆகாரம் ஐகாரமாகத் திரியும் , ஈ ஈறு இகரமும் - மொழி இறுதி ஈ காரம் இகரமாகத் திரியும் .

பயின்று வருவனவற்றிகுத் திரிபுகூறி ஒழிந்தன வந்த இடத்தில் காண்க என்பார், இகரமும்மாகும் எனப் பயனிலை கொடுத்து முடியாது இகரமுமென அவாய் நிலையாக முடித்தார் .

இடபம் எனவும்,

மிருகம் எனவும்,

ஏழா முயிர் இகரமும் இருவுமாயிற்று.

நகம், நாகம், மேகம் எனவும்,

சலவாதி, விசயம் சருச்சரை எனவும்,

பீடம், சடம், கூடம் எனவும்,

தலம், தினம், தரை எனவும்,

பலம், பந்தம், பாரம் எனவும்.

ஐந்து வருக்கத்திலும் இடைநின்ற மும்மூன்று எழுத்தும் அவ்வவ் வருக்கத்தின் முதல் எழுத்தாயின. பங்கயம் என எட்டாம் மெய் மொழி இடையில் யகரமும் ஆயிற்று.

சங்கரன் எனவும்,

பாசம், தேயம் எனவும்,

முப்பதாம் மெய் முதலில் சகரமும் இடையில் சகரமும் யகரமும் ஆயிற்று.

சண்முகன் எனவும்,

விடம், பாடை எனவும்,

முப்பத்தோராம் மெய் முதலிற் சகரமும் இடையிலும் கடையிலும் டகரமும் ஆயிற்று.

சபை எனவும்,

வாசம், மாதம் எனவும்,

முப்பத்திரண்டாம் மெய் முதலில் சகரமும் இடையில் சகரமும் தகரமும் ஆயிற்று.

அரன் எனவும்,

மோகம், மகி எனவும்,

முப்பத்து மூன்றாம் மெய் முதலில் அகரமும் இடையிலும் கடையிலும் ககரமும் ஆயிற்று. *

பக்கம் என முப்பத்தைந்தாம் மெய் மொழியிடையில் இரண்டு ககரம் ஆயிற்று.

மாலை என ஆகார ஈறு ஐகார ஈறு ஆயிற்று.

புரி என ஈகார ஈறு இகர ஈறாயிற்று.

உரையிற்கோடலால், கீரம் என முப்பத்தைந்தாம் மெய் மொழி முதலில் ஒரு ககரமும் ஆகும் எனக் கொள்க.


* முப்பத்து மூன்றாம் மெய் மொழிக்கு முதலில் அகர மாகத் திரியும் என்றல் பொருந்தாது; கெடும் என்றலே பொருந்தும், அரன், ஆடகம், இமம், ஏரம்பன், ஓமம், ஒளத்திரி என வரும். இவைகளிலே ஹகார மெய் கெட, அம் மெய் மேல் ஏறி நின்ற உயிர் நிற்றல் காண்க.