உயிரீற்றுப் புணரியல்

ஆகார வீற்றுச் சிறப்புவிதி

 
171அல்வழி யாமா மியாமுற்று முன்மிகா.
 
ஆறுமுகநாவலர் காண்டிகையுரை
 
அல்வழி ஆ மா = அல்வழியில் ஆவும் , மாவும் ஆகிய இருபெயரும், மியா=மியா என்னும் முன்னிலை அசை இடைச்சொல்லும், முற்று-ஆகார ஈற்று அஃறிணைப் பன்மை எதிர்மறை முற்று வினையும் ஆகிய , முன் மிகா = இவற்றின் முன் வரும் வல்லினம் இயல்பாகும் .

1. ஆ குறிது, மா குறிது, சிறிது, தீது, பெரிது என அல்வழியில் ஆவு மாவுமாகிய இரு பெயர் முன்னும் வலி இயல்பாயின . மா= இங்கே விலங்கு .

2. கேண்மியா கொற்றா, சாத்தா, தேவா, பூதா என மியா என்னும் முன்னிலை அசை இடைச்சொல் முன் வலி இயல்பாயின .

3. உண்ணா குதிரைகள், செந்நாய்கள், தகர்கள், பன்றிகள் என ஆகார ஈற்று அஃறிணைப் பன்மை எதிர்மறை முற்று வினை முன் வலி இயல்பாயின .

உண்ணாக் குதிரைகள் எனப் பொது விதியால் மிகுமாயின், தகர ஈறு குறைந்த எதிர்மறைப் பெயரெச்சமாம் எனக் கொள்க .

ஆமா என்ற மாத்திரமே காட்டுப்பசு எனவும் பொருள் பட இரட்டுற மொழிந்தமையால் , ஆமா என்னும் பெயர் முன்னும் வலிமிகாமை கொள்க .

ஆமா குறிது, சிறிது, தீது, பெரிது எனவரும் .

"முற்று முன்மிகா" எனவே, அருத்தாபத்தியால், அவ்வினையாலணையும் பெயர் முன்னும் , அவ்வினைமுற்று வினையெச்சமாயவற்றின் முன்னும் அவ்வாறு மிகாமை கொள்க .

உண்ணா கிடந்தன, சென்றன, தந்தன, போயின என வரும் . இங்கே, உண்ணா என்றது வினையாலணையும் பெயராயின் உண்ணாதனவாகிய குதிரைகள் கிடந்தன எனவும் .

வினைமுற்று வினையெச்சாமாயின் உண்ணாதனவாய்க் கிடந்தன எனவும் பொருள்படும் .

உண்ணாக் கிடந்தன எனப் பொதுவிதியால் மிகுமாயின், உண்டு எனப் பொருள்படும் செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சமும் , உண்ணாது எனப் பொருள்படும் துவ்வீறு குறைந்த செய்யா என்னும் எதிர்மறை வினையெச்சமுமாம் எனக் கொள்க .

இது " இயல்பினும் விதியினும் " (சூ. 165) என்னும் சூத்திரத்தால் எய்தியது ஒரு மருங்கு விலக்கல் .