உயிரீற்றுப் புணரியல்

இகர ஈற்றுச் சிறப்புவிதி

 
173அன்றி யின்றியென் வினையெஞ் சிகரந்
தொடர்பினு ளுகர மாய்வரி னியல்பே.
 
ஆறுமுகநாவலர் காண்டிகையுரை
 
அன்றி இன்றி என் வினை யெஞ்சு இகரம் = அன்றி இன்றி என்னும் வினையெச்சக் குறிப்புச் சொற்களின் ஈற்றில் உள்ள இகரம் , தொடர்பினுள் உகரம் ஆய்வரின் - செய்யுளில் உகரமாய்த் திரிந்து வரின் , இயல்பு - வருங் க, ச, த, பக்கள் பொதுவிதியால் மிகாது இயல்பாகும்.

வாளன்று பிடியா வன்கணாடவர் - வாள், அன்றி
விண்ணின்று பொய்ப்பின் - விண், இன்றி

உகர மாகத் திரியாவிடின் வாளன்றிப் பிடியா, விண்ணின்றிப் பொய்ப்பின் என வல்லெழுத்து மிகும் எனக் காண்க.

"வினையெஞ்சு இகரந் தொடர்பினுள் உகரமாய் " என்றது எய்தாதது எய்துவித்தல் ; அஃது எய்திய இடத்துப் புணரும் வல்லினம் இயல்பாம் என்றது ; 'இயல்பினும் விதியினும்' என்னுஞ் சூத்திரத்தால் எய்தியது விலக்கல்.